குட்டிப்புலி – விமர்சனம்!

Kutti-Puli-Movie-Poster

சுந்தரபாண்டியன் வெற்றிக்கு பிறகு சசிகுமார் கமெர்சியல் பாணியில் இறங்கி கலக்க எடுத்துள்ள அடுத்த முயற்சி தான் இந்த குட்டிப்புலி. ஓபனிங் சாங், நாலு சண்டை, அம்மா செண்டிமெண்ட் என MGR பாணியில் இறங்கியுள்ளார் சசிகுமார். மதுரையை சுற்றி உள்ள ஊர்களில் நடக்கும் அடிதடி, சண்டை, திருவிழா போன்றவற்றில் அம்மா மகன் பாசத்தை சேர்த்துள்ளார் இயக்குனர் முத்தையா.

மதுரையில் சண்டியராக சுற்றித்திரியும் சசிகுமாருக்கு திருமணம் செய்து வைத்து அவனை ஒரு சராசரி மனிதனாக மாற்ற நினைக்கிறார் அவரது அம்மா சரண்யா. ஆனால் சசிகுமாருக்கோ தான் ஒரு சண்டியர், தன்னை நம்பி வரும் பெண் கஷ்டப்படகூடாது என்ற மனநிலை. அதனாலேயே அம்மா பார்க்கும் பெண்களை எல்லாம் ஏதாவது செய்து திருமணத்தை நிறுத்திவிடுகிறார்.

இந்த நிலையில் அந்த தெருவில் புதிதாக வந்து குடியேறுகிறார் லக்ஷ்மி மேனன். சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க நேரிடுகிறது. அம்மா சரண்யாவும் மிகவும் சந்தோஷப்பட்டு கோவிலுக்கு சென்று நேர்த்தி கடன் செலுத்துகிறார், மகனுக்கு பேன்ட், சர்ட் எடுத்து கொடுத்து அழகு பார்க்கிறார். திருமணத்திற்கு வேண்டியவற்றை எல்லாம் செய்ய ஆரம்பிக்கிறார்.

இந்த நிலையில் மகனை கொல்ல நிறைய பேர் திரிகிறார்கள் என தெரிந்து அவர்களிடம் எல்லாம் சென்று மன்னிப்பு கேட்கிறார். இது சசிகுமாருக்கு தெரியவர அவர் பொய் என்ன செய்கிறார். அம்மா என்ன செய்தார் என்பது கிளைமாக்ஸ்.

சுந்தரபாண்டியன் படத்திற்கு பின் சசியின் கிராப் மேலே எகிறி இருக்கும் வேளையில் மேலும் ஒரு கமெர்சியல் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் சசி. இந்த படத்தில் சண்டைக்காட்சிகளில் மனிதர் ஒன் மேன் ஆர்மி. வருபவர்களை எல்லாம் சாய்த்து விட்டு போய்க்கொண்டே இருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளை பார்க்கத்தான் முடியவில்லை.

படத்தில் முக்கிய வேடம் நாயகியை விட அம்மா சரண்யாவிற்கு தான். அன்பை கண்களில் காட்டி நிஜ அம்மாவாகவே வாழ்ந்துள்ளார். தெய்வானை அம்மாவாக, மகனுக்காகவே வாழும் சரண்யா படத்தின் முடிவில் எடுக்கும் முடிவு கனமானது. ஒவ்வொரு அம்மாவின் தியாகத்தையும் நினைவுபடுத்துகிறது அவரின் கதாபாத்திரம்.

நாயகியாக வரும் லக்ஷ்மி மேனனுக்கு இது சசியுடன் நடிக்கும் தொடர்ச்சியான இரண்டாவது படம். ஆனாலும் போன படத்தை விட இந்த படத்தில் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் சற்று குறைவு, அழகாக இருக்கிறார்.

படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக அந்த பப்பு கேங் லவ் காமெடி கலகலக்க வைக்கிறது. மதுரையின் சுற்றுபகுதிகளையும், சந்துகளையும் நன்றாகவே ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.ஜிப்ரானின் இசையில் பாடல்கள் ஏதும் மனதில் நிற்கவில்லை. நிறைய பாடல்கள் வந்து ரசிகர்களை நெளியவைக்கிறது.

மொத்தத்தில் அம்மா மகன் பாசத்தை காட்டி நெகிழ வைத்துள்ள இயக்குனர் முத்தையா, நிறைய குழப்பத்தினால் படத்தை நீட்டி இழுத்து கொஞ்சம் போராக கொண்டு சென்றுள்ளார்.