நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த தொண்டர்! – கண்ணீர்விட்ட வைகோ

மதுரையில் வைகோ தலைமையில் நியூட்ரினோ எதிர்ப்பு நடைப்பயணம் தொடங்கயிருந்த நிலையில் சிவகாசியைச் சேர்ந்த ம.தி.மு.க தொண்டர் ரவி தீக்குளித்தார்.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து அதன் ஆபத்துகளைப் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யும் வகையில், தேனி மாவட்டம் கம்பம் வரை செல்லும் நடைப்பயணத்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று மதுரை பழங்காநத்தத்தில் தொடங்கினார்.

காலை 9 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடைப்பயணத்தைத் தொடங்கி வைக்க தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார். திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், முத்தரசன், கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, தெகலான் பாகவி, கௌதமன் உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் நடைப்பயணம் சற்று நேரத்தில் தொடங்க இருந்த நிலையில் சிவகாசியைச் சேர்ந்த ம.தி.மு.க தொண்டர் ரவி தீ வைத்துக்கொண்டார். தீக்காயம் அடைந்த ரவியை அருகிலிருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தன் கண்முன் தீக்குளித்த தொண்டரைப் பற்றி வைகோ மேடையில் பேசி கண்ணீர்விட்டு அழுதார். `தீக்குளித்த தொண்டர் ரவி உயிர் பிழைக்க இயற்கையிடம் வேண்டுகிறேன்’ என்றார்.

Leave a Response