விலங்குகள் புகாமல் தடுக்க விளை நிலங்களில் பாட்டிலை தொங்க விடும் விவசாயிகள்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் 56 சதவீதம் வனப்பரப்பு நிறைந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்கு புலி சிறுத்தை, காட்டெருமை, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் அதிகளவு உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம், மலை காய்கறி விவசாயம் அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. வனத்தையொட்டி விவசாய நிலங்கள் அதிகளவு உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே காலநிலை மாற்றம் காரணமாக பருவமழை முறையாக பெய்வதில்லை. இதனால் வனப்பகுதிகளில் வன விலங்குகளுக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை. இதனால் காட்டெருமை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புகளுக்கு அருகாமையில் உலா வருகின்றன.

அப்போது அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. குடியிருப்புகளையும் சேதம் செய்து விடுகின்றன. வனத்துறையினரும் வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டாலும் வன விலங்குகள் உணவு தேடி வருவது தடுக்க முடிவதில்லை. காட்டேரி, பாலாடா உள்ளிட்ட பகுதிகளில் வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டெருமை, பன்றிகள் போன்றவை நுழையாமல் தடுக்க விவசாயிகள் தங்களின் நிலங்களில் நூதன முறையில் காலி கண்ணாடி பாட்டில்களை கட்டி தொங்க விட்டுள்ளனர்.

காற்று வீசும் போது வேலியில் கட்டி தொங்க விடப்பட்டுள்ள கண்ணாடி பாட்டில்கள் ஒன்றுடன் ஒன்று உரசி ஒருவித விசில் சத்தம் ஏற்படுகிறது. இந்த சத்தத்திற்கு பயந்து விலங்குகள், விவசாய நிலங்களுக்குள் புகுவதில்லை. இதனால் மூலம் காய்கறி பயிர்கள் வன விலங்குகளால் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response