ஈரோடு – திருச்சி வழித்தடத்தில் மின்சார ரயில்கள்-பயண நேரம் குறையும்..

கரூர்: ஈரோடு – திருச்சி மின்பாதையில் பயணிகள் ரயில்கள் இயக்கம் துவங்கியது. இதையடுத்து திண்டுக்கல் மார்க்கத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது.ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு கரூர் வழியாக மின்பாதை அமைக்கப்பட்டது. இதற்காக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வும் முடிவுற்றது. பாதுகாப்பு  ஆய்வு முடிந்ததையடுத்து ரயில்களை இயக்க அனுமதியளிக்கப்பட்டது. இதனையடுத்து ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு கரூர் வழியாக ரயில்கள் இயக்கம் துவங்கியது. பாசஞ்சர் ரயில்கள் தற்போது இயக்கப்படுகிறது. தொடர்ந்த பிற ரயில்களும் மின்சார இன்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்பட உள்ளது. டிசம்பருக்குள் அனைத்து ரயில்களும் மின்சார இன்ஜினில் இயக்கப்படும்.

அடுத்து கரூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு செப்டம்பரில் துவக்கப்பட்டு ரூ.60கோடி மதிப்பில் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதேபோன்று கரூரில் இருந்து நாமக்கல், சேலத்திற்கு மின்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஈரோடு திருச்சியை தொடர்ந்து கரூர் திண்டுக்கல் மின்பாதையில் மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்கப்படும். தொடர்ந்து சேலத்திற்கும் மின்பாதை நிறைவு பெற இருக்கிறது.  சேலம் மின்பாதையும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் கரூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து நான்கு திசையிலும் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.

மின்சார ரயில் இன்ஜின் பொருத்தப்படுவதால் ஆங்காங்கே டீசல் இன்ஜினை மாற்றும் வேலை கிடையாது. தற்போது நாகூரில் இருந்து எர்ணாகுளம், மயிலாடுதுறையில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஈரோட்டில் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு, திருச்சியில் அந்த இன்ஜின் விடுவிக்கப்பட்டு மீண்டும் மின்சார இன்ஜின் பொருத்தப்படும். இந்த வேலை இனி இருக்காது. இதனால் பயண நேரம் அரைமணிநேரம் வரை குறையும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Response