ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு : புதுச்சேரி பட்டதாரி பெண் விழிப்புணர்வுப் பயணம் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரி பெண் உள்பட 5 பேர், புதுச்சேரியில் இருந்து 470 கி.மீ. விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணத்தை இன்று தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுதல், தலைக்கவசம் அணிவதன் கட்டாயம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்களை செய்து வருகிறார்.

இந்த நிலையில், மகேஸ்வரி புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள் மூலம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விழிப்புணர்வுப் பயணம் மேற்கொள்ளப்போவதாக நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அதன்படி பட்டதாரி பெண் உள்பட 5 பேர் தங்களது விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணத்தை புதுச்சேரியில் இருந்து இன்று தொடங்கியுள்ளனர்.

இந்தப் பயணம் புதுவை கடற்கரை காந்தித் திடலில் இருந்து தொடங்கி புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி, மதுரை, அருப்புக்கோட்டை, எட்டயபுரம் வழியாக தூத்துக்குடியில் முடிவடைகிறது.

மொத்தத்தில் தமிழகம், புதுச்சேரியில் 477 கி.மீ. தொலைவுப் பயணம் செய்து இந்த பிரசாரத்தை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.

மகேஸ்வரி ஏற்கெனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2ஆயிரம் கி.மீ. தொலைவு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Response