சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை பிரிக்க கூடாது-உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

திருமணத்துக்கு உரிய வயதில் இருக்கும் ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்தால், அதை தடுப்பதற்கோ, தலையிடுவதற்கோ, பிரித்து வைப்பதற்கோ கட்டப்பஞ்சாயத்து அல்லது சாதிப் பஞ்சாயத்துக்கு உரிமையில்லை. அது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்புக் கூறியுள்ளது

சக்தி வாகினி என்ற தனியார் தொண்டு நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒருபொது நலன் மனுத் தாக்கல் செய்து இருந்தது. அதில் கிராமங்களி்ல செயல்படும் சாதிப்பஞ்சாயத்துக்கள், கட்டப் பஞ்சாயத்துக்கள் காதலித்து திருமணம் செய்யும் ஆண்களையும், பெண்களையும் பிரித்து வைக்கிறார்கள்.

சிலநேரங்களில் சாதிமறுப்பு திருமணம் செய்த பெண்களை ஆணவக் கொலையும் செய்கிறார்கள். இதைத் தடுக்க மாநிலஅரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் வழிநாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர், டிஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிந்து, மார்ச் மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர், டிஒய் சந்திரசூட் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

அதில் கட்டப் பஞ்சாயத்துக்களை எப்படி தடுப்பது, காதலித்து திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை அறிவித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

திருமண வயது வந்த ஒரு ஆணும், பெண்ணும் சாதிவேறுபாடு பார்க்காமல் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்வது அவர்களின் அடிப்படை உரிமை. இந்த திருமணத்தில் மூன்றாவது நபர், அதாவது உறவினரோ, அல்லது வேறுயாரேனும் தலையிடுதல், அவர்களை மிரட்டுதல், அல்லது அவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுதல், பிரித்து வைக்க முற்படுதல் என்பது கூடாது.

உரிய திருமண வயதை அடைந்த ஆணும்,பெண்ணும் காதலித்து திருமணம் செய்தபின், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏதேனும் இருப்பதாக போலீஸாரிடம் புகார் அளித்தால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு இருக்கிறது.

சாதி மாறி காதலித்து திருமணம் செய்தவர்களை கிராமங்களில் செயல்படும் கட்டப் பஞ்சாயத்துக்கள் தலையிட்டு பிரித்து வைப்பது, அதில் தலையிடுவது கூடாது. கட்டப் பஞ்சாயத்து நடைமுறை அல்லது, கிராமங்களில் இருக்கும் சாதிப் பஞ்சாயத்துக்கள் என்பது சட்டவிரோதமாகும்.

காதலித்து திருமணம் செய்த தம்பதியை கேள்வி கேட்க அந்த சமூகத்துக்கோ அல்லது கட்டபஞ்சாயத்துக்கோ அல்லது சாதிப் பஞ்சாயத்துக்கோ உரிமை இல்லை.

ஒரு பெண் அல்லது ஆண், தனக்கு விரும்பிய துணையை தேர்வு செய்வது அவர்களின் சுய விருப்பமாகும்.

கிராமங்களில் செயல்படும் கட்டப்பஞ்சாயத்துக்கள், சாதிப் பஞ்சாயத்துக்கள் என்பது, கலாச்சார காவலர்கள் போலும், சமூகத்தின் நெறிமுறைகளை காப்பவர்கள் போல் செயல்பட்டு வருகிறார்கள். ஆண், பெண்ணுக்கும் இடையே நடக்கும் திருமணம் என்பது சட்டத்தால் நிர்வாகிக்கப்பட வேண்டும்.

ஒரு திருமணம் செல்லுபடியாகுமா? அல்லது செல்லுபடி அற்றதா? என்பதை முடிவு செய்வதும், குழந்தைகள் சட்டப்பூர்வமானவர்களா அல்லது சட்டப்பூர்வமற்றவர்களா என்பதை முடிவு செய்வதும் நீதிமன்றம்தான;. தனி மனிதர்களோ அல்லது ஒரு கூட்டமோ அல்ல. அவ்வாறு அவர்கள் தலையிட்டு தீர்ப்புகூறுவதற்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை.

நாங்கள் பாரம்பரியம், கலாச்சாரம், மரபுகள் குறித்து கட்டுரை எழுதிக்கொண்டிருக்கவில்லை. வயது வந்தவர்களின் திருமண உரிமை மறுக்கப்பட்டு வருகிறது என்பதில்தான் நீதிமன்றம் அக்கறையாக இருக்கிறது. அவர்கள் சேர்ந்து வாழ்வதில் சிக்கல் இருக்கிறது என்பதைத்தான் கருத்தில் கொள்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

இதற்கிடையே கட்டபஞ்சாயத்து அல்லது சாதிப்பஞ்சாயத்துக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் வாதிடுகையில், கட்டப் பஞ்சாயத்துக்கள் சமூகத்தின் நெறிமுறைக் காவலர்களாக இருக்கிறார்கள். சாதிமறுப்பு திருமணத்தை ஆதரிக்கிறோம். நெருங்கிய உறவுக்களு திருமணம் செய்வதைத்தான் எதிர்க்கிறோம் என்று தெரிவித்தனர். இதை நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர்.

மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில், சாதிமறுப்பு திருமணம் செய்தவர்களை பிரிக்க முடியாமல், அவர்களை ஆணவக் கொலை செய்வது என்பது கொலைக் குற்றமாகவே கருதப்படும். இது தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே சுதந்திரமாக திருமண உறவை தேர்வு செய்யும் மசோதா நிலுவையில் இருக்கிறது.

சாதிமறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது அரசின் கடமையாகும். அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாதவகையில் பாதுகாப்பு மையத்தில் கூட வைத்திருக்கலாம்.

காதலித்து திருமணம் செய்பவர்கள் தங்களுக்கு ஆபத்து என உணர்ந்தால், அது குறித்து புகார் அளிக்க மாவட்டந்தோறும் ஒரு சிறப்பு புகார் அளிக்கும் பிரிவு செயல்பட்டு வருகிறது. அந்தபிரிவு புகார்களைப் பெற்று தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Response