சூறாவளி காற்றுடன் மழை : அந்தியூரில் வாழைகள் பலத்த சேதம் !

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம், விராலிகாட்டூர், செல்லம்பாளையம், கோவிலூர், ராமகவுண்டன் கொட்டாய், வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாழைகள் அதிகம் பயிரிட்டுள்ளனர். சொட்டு நீர் பாசனத்தைப் பயன்படுத்தி கதளி, செவ்வாழை, மொந்தன், நேந்திரம் உள்ளிட்ட வாழை ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. வறட்டுப்பள்ளம் வனப்பகுதியொட்டிய பகுதிகளில் இந்த சூறாவளி காற்று அடித்தது. இதனையொட்டிய விவசாய நிலங்களில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தது.

இந்த பகுதிகளில் அண்ணாதுரை, கண்ணன், ஜெயக்குமார், அம்பிகா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 80 ஆயிரத்திற்கும் அதிகமான வாழைகள் சேதமானது.  இதில் வாழை குலை தள்ளி அறுவடைக்கு தாயாராக இருந்த நிலையில் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
தற்போது ஒரு வாழைத்தார் ரூ.400 முதல் ரூ.500 வரை விலை போகிறது. இது குறித்து விவசாயிகள் வருவாய்த்துறையினர், தோட்டக்கலைத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அந்தியூர் வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர் கணேசன் ஆகியோர் விவசாயிகளின் தோட்டத்தில் நேரில் சென்று கள ஆய்வு செய்தனர்.

இது குறித்து வருவாய் ஆய்வாளர் கூறும்போது:-

இந்த பகுதிகளில் திடீரென்று சூறாவளி காற்றுடன், பெய்த மழையால் 100 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் 70 சதவீத வாழைகள் சேதமாகி உள்ளது. இதன் சேத மதிப்பு குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Leave a Response