அதே எதிர்நீச்சல் டீம், புது ஆடியோ கம்பெனி – அதிரடியாக கலக்கும் தனுஷ்!!

எதிர் நீச்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியை வைத்து மீண்டும் படம் தயாரிக்க இருக்கிறார் தனுஷ். எதிர் நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த், நந்திதா, சதீஷ் நடித்தனர். துரை செந்தில்குமார் இயக்கினார். இப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இன்னொரு படத்திலும் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு உள்ளனர் எதிர்நீச்சல் படக்குழுவினர். துரை செந்தில்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். தனுஷ் தயாரிக்கிறார். கதை மற்றும் படப்பிடிப்பு எப்போது துவக்குவது என்பது பற்றியெல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை. புதுப்படம் பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் உறுதி செய்துள்ளார்.

மேலும், தயாரிப்பாளராக வெற்றி பெற்றுள்ள தனுஷ், தற்போது சொந்தமாக மியூசிக் கம்பெனி தொடங்க திட்டமிட்டுள்ளார். வுண்டர்பார் ஸ்டுடியோ என்று தன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையே சூட்டியுள்ளார். தனுஷ் தயாரித்த 3, எதிர்நீச்சல் படப் பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இதுவும் அவருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

விரைவில் இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடு குறித்து அறிவிக்கப் போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் தனுஷ்.