சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் போலீஸ் தாக்கியதால் இளைஞர் தீக்குளிப்பு..

WhatsApp Image 2018-01-24 at 6.52.15 PM

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் சீட் பெல்ட் அணியாமல் காரில் வந்த இளைஞரை போலீஸ் தாக்கியதால் அந்த இளைஞர் தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கு பல கட்டுப்பாடுகளை திட்டவட்டமாக அறிவித்து உத்தரவிட்டு வருகிறது தமிழக அரசு.

இதையடுத்து போக்குவரத்து போலீசாரின் கெடுபிடி அதிகரித்து வருகிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் இருசக்கர வாகனத்தில் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி. புக் உள்ளிட்டவை உள்ளனவா என ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்தால் ஸ்பாட் ஃபைன் போடப்படுகிறது.

மேலும் காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்தாலோ அல்லது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ பெனால்ட்டி போடப்படுகிறது.இதனிடையே வாகன ஓட்டிகளின் மீது போலீசார் வரம்பு மீறி கை நீட்டுவதும் உண்டு. பதிலுக்கு வாகன ஓட்டிகளும் போலீசாரை ரவுண்டு கட்டும் செயல்களும் ஏராளமாக நடந்துள்ளன.

இந்நிலையில் இன்று சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் சொகுசு ஓட்டல் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது அங்கு காரில் வந்த இளைஞர் ஒருவர் சீட் பெல்ட் அணியாமல் வந்துள்ளார். அவரை பிடித்து வலுக்கட்டாயமாக போலீசார் கீழே இறக்கிவிட்டு விசாரணை செய்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபருக்கும் போலீசாருக்குமிடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து போலீசார் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியிலேயே வாலிபரை தாக்கியுள்ளனர். இதில் விரக்தியடைந்த அந்த வாலிபர் காரில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார்.

இதைப்பார்த்த பொதுமக்கள் தீக்காயங்களுடன் துடித்த வாலிபரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் போலீசாரின் இந்த அராஜக போக்கை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீஸ் தாக்கியதால் தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கார் ஓட்டுநர் மணிகண்டனை சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், கார் ஓட்டுநர் தீக்குளிப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், யார் தவறு செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Response