மிருகத்தனமான தாக்குதல்-பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் எச்சரிக்கை!!

bus-2
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அவை பின்வருமாறு:   

உரிமைக்காக போராடிய போக்குவரத்து ஊழியர்களை மிருகத்தனமாக தாக்குவதா? 

ஊதிய உயர்வு, நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் போராட்டம் நடத்திய போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை காவல்துறை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளது. உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்களை தேசத்துரோகிகளை  கையாளுவது போன்று தாக்கியும், இழுத்துச் சென்றும் காவலர்கள் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்கள் மிகவும் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நடத்தி வரும் வேலைநிறுத்தம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த சில கருத்துக்களை துணைக்கு வைத்துக் கொண்டு போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளது. விருதுநகரில் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தைச் சேர்ந்த பால்பாண்டியன் என்பவரை மட்டும் கைது செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் மறியல் நடத்தினால் மட்டும் தான் கைது செய்யப்பட வேண்டும்; ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யக் கூடாது என்றும் கூறினர். ஒருவேளை கைது செய்வதாக இருந்தால் அனைவரையும் கைது செய்யுங்கள் என்று கூறியதால் ஆத்திரமடைந்த காவலர்கள் அனைத்துத் தொழிலாளர்களையும் ஐந்தறிவு உயிர்களை  இழுத்துச் செல்வதைப் போன்று தரதரவென்று கொடூரமாக இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை வாகனத்தில் ஏற்றி மிருகத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலர் காயமடைந்துள்ளனர். போக்குவரத்துத் தொழிலாளர்கள் அவர்களின் உரிமைகளுக்காக அறவழியில் தான் போராடினார்கள். அவ்வாறு இருக்கும்போது அப்பாவி தொழிலாளர்களை தாக்க வேண்டிய தேவை என்ன? என்பதை காவல்துறையினர் விளக்க வேண்டும். ‘அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் இது தான் கதி’ என்று மற்ற தொழிலாளர்களுக்கு மிரட்டல் விடுப்பதற்காக ஆட்சியாளர்களின் ஆணைப்படிக் கூட இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக் கூடும்.

எந்தவித தூண்டுதலுமின்றி, போக்குவரத்துத் தொழிலாளர்களைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தொழிலாளர்களிடம் தமிழக முதலமைச்சரும், போக்குவரத்து அமைச்சரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Response