ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் ஜி.வி பிரகாஷ்!

f437d4689bf9fcaee514c03912efb6c9

சில நாள்களுக்கு முன்பு ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கடலோரப் பகுதிகளில் இருந்த மீனவக் குடும்பங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்தன. இதனால், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட ஐநூறு மீனவர்கள் மற்றும் விவசாய மக்களுக்கு உதவுவதற்காக முதன்முதலில் கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டப்படுகிறது. இதற்கான முயற்சியை இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ்குமார் தொடங்கிவைக்கிறார்.

எதுதர்மா (Edudharma) என்ற பெயரில் இயங்கும் வலைதள முகவரி மூலமாக இந்த நிதி திரட்டுப்பட்டு வருகிறது. இதுதொடர்பான பணிகளை ஜி.வி.பிரகாஷின் நண்பரும், சமூக சேவகருமான குணசேகரன் மேற்கொண்டுவருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது,

”தென் கடலோர மாவட்டங்களில் ஒகி புயலால் மக்கள் பாதிக்கப்பட்டபோது கன்னியாகுமரிக்கு நேராக சென்று நடிகர் ஜி.வி.பிரகாஷ் தன்னால் முயன்ற உதவிகளைச் செய்தார். மேலும், அப்போது குடும்ப உறுப்பினர்களை முழுவதுமாக இழந்து தனியாளாக ஆதரவற்று நின்ற சின்னத்துறையைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண்மணிக்கு தன்னாலான உதவிகளைச் செய்தார்.

அப்போது அங்குள்ளவர்கள் எங்களுக்கும் ஜி.வி பிரகாஷ்குமார் ஏதேனும் உதவி செய்யமாட்டாரா? என ஏக்கத்துடன் கேட்டனர். அதற்காகவும், கல்வி மற்றும் உடல் நலம் குறித்த திட்டங்களுக்காகவும் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள்குறித்த தகவலை எங்களுடைய உறுப்பினர்கள் மூலம் சேகரித்து, அதில் முதலில் ஐநூறு பேருக்கு கிரௌட் பண்ட் என்ற உத்தி மூலம் நிதி திரட்டி ஆதரிக்க எண்ணினோம். இந்தத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டதுடன், தன்னுடைய பங்களிப்பாக ஒரு சிறிய தொகையைக் கொடுத்து இந்த கிரௌட் பண்ட் நிதி திரட்டும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்” என்றார்,

இதுதவிர, ஜி.வி பிரகாஷ்குமார் ஏற்கெனவே இந்த எதுதர்மா என்ற அறக்கட்டளை மூலம் கதிரவன் என்ற தடகள வீரர் பயிற்சியை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி உதவியான ஒரு லட்சத்தை வழங்கியிருக்கிறார் என்பதும், கள்ளக்குறிச்சி என்ற ஊரில் உள்ள அரசு பள்ளிக்கு கழிப்பறை ஒன்றைக் கட்டிக் கொடுக்க நிதி உதவி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Response