சென்னை திரைப்பட கல்லூரியின் புதிய பாடதிட்டங்கள்!!

தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் உருவாக்கிய பெருமை சென்னை திரைப்பட கல்லூரியையே சாரும். இந்த எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் இந்த ஆண்டு முதல் புதிதாக அனிமேஷன் டிப்ளமோ படிப்பு துவங்கப்பட உள்ளது.

எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சென்னை தரமணியில் செயல்பட்டு வருகிறது. இங்கு சினிமா, வீடியோ படங்கள் தயாரிப்புக்குத் தேவையான தொழில்நுட்பங்களும், பிற திரைப்பட துணைப் பாடங்களும் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகின்றது.

மேலும் இயக்கம் மற்றும் திரைக்கதை வசனம் எழுதுதல், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலிப் பொறியியல், படத்தொகுப்பு போன்ற பல்வேறு படிப்புகளுக்கு டிப்ளமோ படிப்புக்கள் மூன்று ஆண்டு காலத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், 2013-14ம் கல்வியாண்டு முதல் அனிமேஷன் மற்றும் காட்சிப் பயன்கள் எனும் புதிய பட்டயப் படிப்பு துவங்கப்பட உள்ளது. இதற்கான சேர்க்கை ஜூலை மாதம் துவங்க உள்ளது. இது குறித்த தகவல்களை கல்லூரியிலும், இணையதளத்திலும் பெற்று பயன் பெறலாம்.