இதுவரை என்ன செய்திட்டார் விஷால்? – சரவெடி கேள்விகள் எழுப்பும் எஸ்.வி.சேகர்

ஆர்.கே.நகர் தொகுதிக்காக நடிகர் விஷால் இதுவரை என்ன செய்திருக்கிறார் எனவும் எங்கெங்கேயோ இருப்பவர்கள் எல்லாம் ஆர்.கே.நகரில் ஓட்டு போட முடியாது எனவும் பாஜகவின் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என சினிமா சம்பந்தப்பட்ட பொறுப்புகளில் பதவி வகித்து வருபவர் நடிகர் விஷால். அவர் தற்போது திரையுலகையும் தாண்டி சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

ஜெயலலிதா என்ற ஒரு இரும்பு பெண்மணி உயிர் மாண்டதையடுத்து தமிழக அரசியலில் பலபேர் முதலமைச்சர் நாற்காலிக்கு உரிமை கொண்டாட பார்க்கின்றனர்.

ஏன் ஜெயலலிதாவுடன் இருந்த கூட்டணி ஆட்களே ஒருவருக்கொருவர் அடித்து கொண்டும் பேசி கொண்டும் முரண்பட்டு வருகின்றனர். மக்கள் யாராவது இதை கேட்டால், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா… என்று சொல்லி முடித்து விடுகிறார்.

நீண்ட நாட்களாக அரசியலில் களமிறங்குவேன் என்று சொன்ன நடிகர் ரஜினி இதுவரை களத்தில் குதிக்கவில்லை. அரசியல் எனக்கு சரிபட்டு வராது என சொன்ன நடிகர் கமல் அரசியலில் குதிப்பேன் என அறிவிப்பு வெளியிட்டு விட்டார்.

இந்நிலையில் அரசியல் பற்றி மூச்சே விடாமல் இருந்த நடிகர் விஷால் அரசியல் குதித்துவிட்டார்.
அதாவது தமிழகத்தில் ஆர்கே., நகர் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுக., சார்பில் மருது கணேஷூம், அதிமுக., சார்பில் மதுசூதனனும், டிடிவி தினகரன் தனியாகவும் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.

இவர்களோடு நடிகர் விஷாலும் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதை அதிகாரப்பூர்வாக விஷால் அறிவித்துள்ளார். வரும் திங்கள் அன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் பேசுகையில், ஆர்.கே.நகர் தேர்தலில் விஷாலின் முடிவு புத்திசாலித்தனமானது அல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும், ஆர்.கே.நகர் தொகுதிக்காக நடிகர் விஷால் இதுவரை என்ன செய்திருக்கிறார் எனவும் எங்கெங்கேயோ இருப்பவர்கள் எல்லாம் ஆர்.கே.நகரில் ஓட்டு போட முடியாது எனவும் குறிப்பிட்டார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் இருக்கும் மக்கள் மட்டுமே ஓட்டு போடுவார்கள் எனவும் என்ன தைரியத்தில் இவர் களம் இறங்குகிறார் எனவும் கேள்வி எழுப்பினார்.

Leave a Response