இன்னும் நான் சுதந்திரமாக உணரவில்லை: சேலம் கல்லூரிக்கு வந்த ஹாதியா பேட்டி

 

27-1511788155-hadiya7

கல்லூரிக்கு வந்த பிறகும் இன்னும் நான் சுதந்திரமாக உணரவில்லை என்று கேரளப் பெண் ஹாதியா சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கே.எம்.அசோகன். இவரது மகள் அகிலா (வயது 25) கடந்த 2015-ம் ஆண்டு தமிழகக் கல்லூரியில் மருத்துவம் படித்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் இவர் முஸ்லிமாக மதம் மாறினார். ஹாதியா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு ஷபின் ஜகான் என்பவரை திருமணம் செய்தார். இந்த திருமணத்தை எதிர்த்து பெண்ணின் தந்தை கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

27-1511788146-hadiya9

பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு பகுதியாக தன் மகள் மதம் மாற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் சிரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் என்ற பயங்கரவாத அமைப்புடன் சேரப் போவதாகவும் தெரிவித்தார். இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் இத்திருமணம் செல்லாது என்று அறிவித்தது. ஹாதியாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஷபின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஹாதியா சேலத்தில் உள்ள சிவராஜ் மருத்துவக் கல்லூரியில் ஹோமியோபதி மருத்துவப் படிப்பை தொடர உரிய ஏற்பாடுகளைச் செய்யும்படி கேரள அரசுக்கு உத்தரவிட்டது. பின்னர் ஹாதியாவை கேரள போலீஸார் நேற்று(செவ்வாய்க்கிழமை) சேலத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சேலம் மாநகர காவல்துறை ஹாதியா கல்லூரிக்கு செல்லும்போதும், திரும்பி விடுதிக்கு வரும்போதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதுதவிர 24 மணி நேரமும் ஹாதியாவுடன் பெண் காவலர் ஒருவர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த ஹாதியா கூறியதாவது:

”மற்ற மாணவிகளுடன் சேராமல் தனியாகத்தான் இருக்கிறேன். இப்போதுதான் கல்லூரிக்கு வந்தேன். நான் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்று கேட்டேன். ஆனால் இங்கேயும் நான் சுதந்திரமாக இருப்பதாகத் தெரியவில்லை. என் கணவரைத் தொடர்புகொள்ள ஆசைப்பட்டேன். இதுவரை பேச முடியவில்லை.

என்னுடைய பெற்றோருடன் நான் 6 மாதங்கள் தங்கியிருந்தேன். ஆனால் அவர்கள் என்னைத் தொலைக்காட்சியைப் பார்க்கக் கூட அனுமதிக்கவில்லை. எனக்கு யாரெல்லாம்  ஆதரவு தெரிவித்தார்கள், வழக்கில் என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் நான் குழப்பத்துடன் இருப்பதாகப் பெற்றோர் தெரிவித்தனர். ஆனால் நான் தெளிவாகத்தான் இருக்கிறேன்.

 

நீதிமன்ற உத்தரவு இன்னும் கல்லூரிக்கு வரவில்லை. அதற்காக 2 முதல் 3 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்” என்றார் ஹாதியா.

ஹாதியா குறித்து கல்லூரி முதல்வர் கண்ணன் பேசும்போது, ”இதுவரை நீதிமன்றத்திடம் இருந்து உத்தரவு எதுவும் வரவில்லை. அதுவரையில் காவல்துறையினர் அளித்த உத்தரவைப் பின்பற்றுவோம். படிப்பில் சராசரியான மாணவி ஹாதியா. மற்ற மாணவர்களைப் போல இவரையும் சாதாரணமாக நடத்துவோம்” என்றார்.

Leave a Response