தமிழகத்தில் 33 இடங்களில் வருமான வரித்துறை சோதனை: திரையரங்க உரிமையாளர் வீட்டிலும் ஆய்வு!

it raidjpg

தமிழகத்தில் சென்னை பெரம்பூர் எஸ் 2 திரையரங்க உரிமையாளர் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று (நவம்பர் 28) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலா உறவினர் வீடுகளில் வருமானவரித் துறையினர் இருவாரங்களுக்கு முன் சோதனை நடத்தினர். 1800 அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த சோதனை, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி உள்பட தமிழகத்தில் 187 இடங்களில் சோதனை நடைபெற்றது. 215 சொத்துகள், 350 நபர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு சோதனை நடைபெற்றது.

ஜெயா டிவி அலுவலகம், அதன் இயக்குநர் விவேக் ஜெயராமன் வீடு, தி.நகரில் உள்ள விவேக் ஜெயராமன் சகோதரி வீடு, திருத்துறைப்பூண்டி, புதுச்சேரியில் உள்ள நகைக்கடை, மன்னார்குடியில் திவாகரனின் கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பட்டேல், மார்க், மிலன், கங்கா உள்ளிட்ட வணிக நிறுவன குழுமங்கள் சார்ந்த 33 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் ஸ்பெக்டரம் மால் சத்யம் எஸ்2 திரையரங்க உரிமையாளர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. மேலும் அவரது குழுமத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Leave a Response