அணையைத் திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்! உடனடியாக உத்தரவிட்ட முதல்வர்!

 

8ecb0274c471f0e3b843be950922a936

`பெரியார் – வைகை அணையைத் திறக்கக்கோரி விவசாயிகள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீரைத் திறக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, ஒரு போக பாசன விவசாயத்துக்கு தங்களுக்கு வழங்கவேண்டிய தண்ணீரை, புதிய விரிவாக்க கால்வாய்களுக்கு வழங்கி, பாகுபாடு காட்டுவதாக அரசு அதிகாரிகளையும் தமிழக அரசையும் கண்டித்து, இன்று மேலூரில் பல்வேறு இடங்களில் 3000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நான்கு வழிச்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வைகை அணையைத் திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினார்கள். விவசாயிகளின் கோரிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். வைகை அணையில் இருந்து 7 நாள்களுக்கு கூடுதலாக 900 கன அடி தண்ணீர் திறக்க அவர் உத்தரவிட்டார்.

 

இதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகளின் சார்பாக மேலூர் ஒரு போக பாசன விவசாயிகளின் சங்கத் தலைவர் முருகன், ‘பொதுமக்களின் நலன் கருதி நான்கு வழி சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவித்தார். அதேசமயம் 7 நாட்கள் தண்ணீர் திறப்பு என்பது போதாது. குறைந்தது 15 நாட்களுக்காவது திறக்கப்பட வேண்டும்’ தற்போது கிடைத்தது குடிநீருக்கு மட்டும் போதுமானதாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார். அவருடையை அறிவிப்பைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. போராட்டம் முடிவுக்கு வந்தபின் இளைஞர் விவசாய விருது பெற்ற அருண் பேசும்போது, “காலை முதல் போராட்டங்களை நடத்தி வந்த விவசாயிகளுக்கு எந்த வித பதிலும் சொல்லாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியது கண்டிக்க தக்கது” என்றார்.

முன்னதாக அணை திறக்கப்படுவது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் திருமங்கலம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பகுதியில் போதிய மழை பெய்யாத காரணத்தினால், குடிநீரின்றி சிரமப்படுவதாகத் தெரிவித்துவந்தனர். மேலூர் மற்றும் திருமங்கலம் பகுதிகளுக்கு குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்ய, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட கோரிக்கை விடுத்தனர்.

மேலூர் மற்றும் திருமங்கலம் பகுதிகளில், பொதுமக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில்கொண்டு, வைகை அணையிலிருந்து கூடுதலாக 900 கன அடி தண்ணீரை சிறப்பு நிகழ்வாக நாளை முதல் 27-ம் தேதி வரை ஏழு நாள்களுக்குத் திறந்துவிட ஆணையிடப்படுகிறது. திருமங்கலம் பிரதான கால்வாயின் வாயிலாக, 200 கன அடி அளவும் பெரியாறு பிரதான கால்வாய் வாயிலாக 700 கன அடி அளவும் தண்ணீர் வழங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Response