வங்கக்கடலில் அடுத்த வாரம் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாகவும் அதன் நகர்வை அடுத்து தமிழகத்துக்கு மழைக்கான வாய்ப்பு பற்றி கூற முடியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழைக்கான காலம் இன்னும் இருக்கையில் மேலும் மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் கடந்த வாரம் தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்துக்கு மழையை தரவில்லை.
இந்நிலையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதன் மூலம் மீண்டும் தமிழகத்தில் மழை பொழிய வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 6 செ.மீ மழையும், கோத்தகிரியில் 4 செ.மீ. மழையும் பெய்ததாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 21-ம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாகவும் அதன் நகர்வை பொறுத்தே தமிழகத்துக்கு மழைக்கான வாய்ப்பு பற்றி கூற முடியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.