ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? – நாராயணசாமி கேள்வி

bd64dc0a1a696eae02361cc8e947638a

தமிழக அரசைத் தங்களது பினாமியாக வைத்துக்கொண்டு, மத்திய அரசு ஆட்சிசெய்து வருவதாக, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில், முதலமைச்சர் நாராயணசாமியும் காவல்துறை டி.ஜி.பி-யும் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ‘தமிழக அமைச்சர்கள் தங்களுடைய உரிமைகளை யாரிடமும் விட்டுக்கொடுக்கக்கூடாது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வியாதி தமிழகத்திற்கும் பரவியுள்ளது. தமிழக ஆளுநர், கோவை சென்று ஆய்வு செய்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை துறைரீதியாக அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தவோ, ஆய்வுகளை மேற்கொள்ளவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் மட்டுமே அரசின் அன்றாட நிகழ்வுகளில் பங்கெடுக்க அதிகாரம் உள்ளது என்றும், ஆளுநர் இதில் தலையிடக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 

அன்றாட நிகழ்வுகளில் ஆளுநர்கள் பங்கெடுக்கலாம் எனக்கூறி, தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் ஆளுநரிடம் சரணடைந்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், இது போல நடந்திருக்குமா? பிரதமர் அலுவலகத்தில் இதுபோல ஆய்வு நடந்தால் இதை ஏற்றுக்கொள்வாரா? தமிழக அரசைத் தங்களது பினாமியாக வைத்துக்கொண்டு மத்திய அரசு ஆட்சிசெய்துவருகிறது. சட்டத்தை மீறி செயல்பட்டுவரும் ஆளுநர் கிரண்பேடி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருக்கிறோம்.

pdy_cm_0

ஆளுநர் கிரண்பேடி, விதிமுறைகளை மீறி செயல்படுவதுகுறித்து பிரதமரிடம் முறையிட, கடந்த மூன்று மாதங்களாக நேரம் கேட்டும் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. தமிழக முதல்வர் மற்றும் துணைமுதல்வரை மட்டும் பிரதமர் சந்திக்கிறார். பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்காததைக் கண்டித்து, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது பிரதமரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவேன்’ என்றார்.

Leave a Response