சுக்கு – மல்லி கசாயம்:
தேவையானவை:
சுக்கு – 10 கிராம்,
மல்லி – 20 கிராம்,
சீரகம் – 5 கிராம்.
செய்முறை:
சுக்கு, மல்லி, சீரகத்துடன் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளராக வற்றும் அளவு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அதை ஆறவைத்தோ, மிதமான சூட்டிலோ பருகலாம். பனைவெல்லம் சேர்த்தும் குடிக்கலாம். இந்தக் கசாயத்தை உணவுக்குப் பின் காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும்.
பலன்கள்:
மழைக்காலங்களில் வரும் செரிமானப் பிரச்னைகளை தீர்க்க உதவும். வயிறு மந்தமாவதைத் தடுக்கும்.
அறுகம்புல் கசாயம்:
தேவையானவை:
அறுகம்புல் – ஒரு கைப்பிடி,
மிளகு – 10
செய்முறை:
அறுகம்புல்லையும் மிளகையும் இடித்து தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம். இந்தக் கசாயத்தை உணவுக்கு முன் குடிக்க வேண்டும்.
பலன்கள்:
மழைக்கால பூச்சிக்கடிக்கு நல்ல மருந்தாகும்.
சீரகம் – ஓமக் கசாயம்:
தேவையானவை:
ஓமம் – 20 கிராம்,
சோம்பு – 10கிராம்,
சீரகம் – 5 கிராம்,
உத்தாமணி (வேலிப்பருத்தி) இலை – சிறிதளவு
செய்முறை:
ஓமம், சோம்பு, சீரகம் ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்ச வேண்டும். நீர் கொதிக்கும்போது, அதில் உத்தாமணி இலையைப் போட்டு இறக்கி வடிகட்டிக் குடிக்கலாம்.
பலன்கள்:
குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, நெஞ்செரிச்சல், செரிமானப் பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணம் தரும்.
ஆடாதொடை கசாயம்:
தேவையானவை:
ஆடாதொடை இலைகள்- 10,
சுக்கு – 10 கிராம்,
மிளகு – 10 கிராம்,
கிராம்பு (லவங்கம்) – 5 கிராம்
செய்முறை:
ஆடாதொடை இலைகள், சுக்கு, மிளகு, கிராம்பு நான்கையும் சேர்த்து தண்ணீர் விட்டு அந்த தண்ணீர் நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம்.
பலன்கள்:
தொண்டைக் கரகரப்பு, மார்புச் சளி, மூச்சிரைப்பு (wheezing ) ஆகிய பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.
கற்பூர வள்ளி – வெற்றிலை கசாயம்:
தேவையானவை:
கற்பூரவள்ளி இலை- 4, வெற்றிலை – 4 , தூதுவளை இலை- 2 , சுக்கு, மிளகு – சிறிதளவு
செய்முறை:
கற்பூரவள்ளி, வெற்றிலை, தூதுவளை ஆகியவற்றுடன் மையாக அரைத்த சுக்கு, மிளகைச் சேர்த்துக் கொதிக்கவைத்துப் பருகலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கசாயத்துடன் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.
பலன்கள்:
தலைபாரம், தும்மல், டிஹைட்ரேஷன் போன்ற பிரச்னைகளுக்கு நலன் பலனளிக்கும்.
கபசுர கசாயம்:
தேவையானவை:
சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகஞ்சொறி வேர், அக்ரகாரம், முள்ளிவேர், கடுக்காய்த் தோல், ஆடாதொடை, கற்பூரவள்ளி, கோஷ்டம், சீந்தில்கொடி, சிறுதேக்கு (கண்டு பரங்கி), நிலவேம்பு, வட்டத்திருப்பி, முத்தக்காசு. (இந்தப் பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)
செய்முறை:
இந்தப் பொருள்கள் அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் நீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம்.
பலன்கள்:
மழைக்காலங்களில் வரும் எல்லாவிதமான வைரஸ் காய்ச்சல்களை தடுக்கவும், வந்தால் குணமாக்கவும் இந்தக் கசாயம் உதவும்.
கவனம்:
மேற்கண்ட கஷாயங்களை 15 வயதுக்குட்பட்டவர்கள் 30 மி.லியும், பெரியவர்கள் 60 மி.லியும், காலை, மாலை இருவேளைக்கு மூன்று நாள்கள் குடிக்கலாம். சளி, காய்ச்சல் கண்டவர்கள் சுயமாக இந்த கஷாயத்தை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.