தமிழ்நாடு அரசுப் பணியிடங்களை ஆக்கிரமிக்கும் வெளிமாநிலத்தவர்கள்!

 

maxresdefault

தமிழ்நாட்டிலுள்ள நடுவண் அரசுப் பணியிடங்களை ஆக்கிரமித்திருக்கும் வெளிமாநிலத்தவர் இப்போது தமிழ்நாடு அரசுப் பணியிடங்களையே ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர்!

தமிழ்நாட்டின் பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வில் திட்டமிட்டு இப்படி அக்கிரமம் நடக்கும்போது என்ன செய்துகொண்டிருந்தது தமிழக அரசு?

அப்படி வெளிமாநிலத்தவர் யாரும் தமிழ்நாடு அரசுப் பணியில் அமர்ந்துவிடாதபடி தடுப்பதுடன் அவர்கள் நுழைகிற மறைமுக வழிகளையும் அடைத்துவிடக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் இன்று 12.11.2017 விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…………………..

கடந்த செப்டம்பர் 16ந் தேதியன்று தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 1058 விரிவுரையாளர் காலியிடங்களுக்கு நடந்த அந்தத் தேர்வில் 1,33,567 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு கடந்த 7ந் தேதியன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

ssc-n

தேர்வு முடிவு அதாவது தேர்வானவர்களின் பட்டியல் எப்போதுமே பதிவு எண், பிரிவு, மதிப்பெண் ஆகியவற்றுடன் பெயரையும் இணைத்தே வெளியிடப்படும். ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக பெயர்களை மறைத்துவிட்டு, பதிவு எண், பிரிவு, மதிப்பெண் ஆகியவை மட்டுமே வெளியாகியிருந்தன.

இது சந்தேகத்தை ஏற்படுத்தவே, தேர்வான சில பதிவு எண்களின் பெயர்களைத் தேடிப் பிடித்துப் பார்த்தபோது, அவை குப்தா, ரெட்டி, சர்மா, நாயர், சிங், பாண்டே என வெளிமாநிலப் பெயர்களாக இருந்தன.
தேர்வு நடந்த அன்றே வெளிமாநிலத்தவர் பலர் சென்னை (PT32) தேர்வு மையத்தில் தேர்வெழுதியதைக் கண்ட தமிழக மாணவர்கள் அதை புகாராகத் தெரிவித்திருந்தனர். அது இப்போது உண்மையாகிவிட்டது.

எந்திரவியல் பொறியியல் துறைக்கு 219 விரிவுரையாளர்கள் தேவை. அதில் பொதுப்பட்டியலுக்கான 67 இடங்களில் 46 பேர் வெளி மாநிலத்தவர். அதாவது 68 விழுக்காட்டு இடங்கள் வெளி மாநிலத்தவர்க்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

மின்னணு தொடர்பியல் துறைக்குத் 118 விரிவுரையாளர்கள் தேவை. இதில் பொதுப்பிரிவுக்கான 36 இடங்களில் 31 பேர் வெளி மாநிலத்தவர். அதாவது 86 விழுக்காட்டு இடங்கள் வெளிமாநிலத்தவர்க்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

05-1459846279-velmurugans-s-600
இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறைக்குத் தேவைப்பட்ட 3 பேரிலும் ஒருவர் வெளிமாநிலத்தவர்.

மேலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குரிய பிரிவுகளின் கீழும் பல வெளி மாநிலத்தவர்கள் தேர்வாகியுள்ளனர்.
வரும் 23ந் தேதியன்று சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு இவர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். இவர்களுக்கான ஊதியம் மாதம் ரூ.15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை.

தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பயிற்று மொழி ஆங்கிலம்தான் என்றாலும் தமிழ்வழியில் படித்துவிட்டு வந்த மாணவர்களே அதிகம் என்பதால் தேர்வை தமிழிலும் எழுதும் நடைமுறை உள்ளது. இவர்களுக்கு தமிழே தெரியாத வெளிமாநிலத்தவர் எப்படி விரிவுரையாற்ற முடியும்?
“நீட்”டைத் திணித்து நமது மருத்துவக் கல்லூரி இடங்களை அபகரித்தது போல் இப்போது தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களை அபகரிக்கிறார்கள்.

மாநில அரசுப் பணிகளைப் பொறுத்தவரை, வேறு எந்த மாநிலமும் அதனைப் பிற மாநிலத்தவருக்கு விட்டுக்கொடுப்பதில்லை. அங்கெல்லாம் “மண்ணின் மக்களுக்கே வேலை” என சட்டமே இயற்றப்பட்டிருக்கிறது. குசராத்தில் 1995லும் கர்நாடகாவில் 1986லும் மேற்கு வங்கத்தில் 1999லும் சட்டம் இயற்றிவிட்டார்கள்.

தலைநகர் டெல்லியில்கூட கடந்த ஜூலையில் ஆம் ஆத்மி அரசு இந்த சட்டத்தை இயற்றிவிட்டது.

அதன்படி டெல்லிப் பல்கலைக்கழகத்திலும் அதில் இணைக்கப்பட்டுள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் 85 விழுக்காட்டு இடங்கள் டெல்லி மாநிலத்தவருக்கே.

20030

“மண்ணின் மக்களுக்கே வேலை” என்பதில் தமிழக மக்களுக்குத்தான் அநீதி இழைக்கப்படுகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க, உடனடியாக “மண்ணின் மக்களுக்கே அரசு வேலை மற்றும் அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இடம்” எனும் சட்டத்தை இயற்றுமாறு அரசை கேட்டுக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

அதோடு, “வஞ்சகமான முறையில் வெளிமாநிலத்தவர் அபகரித்த பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி நியமனத்தை அரசு உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்; வரும் 23ந் தேதியன்று நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்புப் பணியையும் ரத்து செய்ய வேண்டும்; 100 விழுக்காடு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியையும் தமிழக மக்களுக்கே வழங்க சட்டத்தின் மூலம் உறுதி செய்ய வேண்டும்” எனவும் தமிழக காவல் துறையில் காவலர் பணிக்கு தேர்வு செய்தபோது தமிழ்நாட்டை அல்லாத பிற மாநிலத்தவர்களும் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தெரியவருகிறது. இதை தடுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

Leave a Response