திருக்கழுகுன்றத்தில் தண்ணீரை வெளியேற்ற சாலையை உடைத்ததால் கடுப்பான மக்கள்!

thirukk
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 25 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட கொடங்கான் ஏரி, திருக்கழுகுன்றத்தை அடுத்த கல்பாக்கம், புதுப்பட்டினம், வாயலூர் காரைத்திட்டு பகுதியின் பிரதான சாலை அருகில் உள்ளது.

இந்த நிலையில், புதுப்பட்டினம் -காரைத்திட்டு பகுதியில் புதிதாக தார்ச் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அங்கு மழைநீர் வடியும் வகையில் சிறுபாலம் உண்டாக்குமாறு மக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், அங்கு பாலம் அமைக்காமல் தார்ச் சாலை மட்டும் போடப்பட்டது.

இந்நிலையில் தார்ச் சாலை போடப்பட்டு ஒன்றரை மாதமே ஆன நிலையில், கடந்த ஒருவாரமாக பெய்த கனமழையில் அங்குள்ள கொடங்கான் ஏரி நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் வெளியேற வழியின்றி அங்குள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது.

சிறுபாலம் அமைக்காததே இதற்குக் காரணம் என்று அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதையடுத்து, தண்ணீரை வெளியேற்ற திருக்கழுகுன்றம், புதுப்பட்டினம் ஊராட்சி நிர்வாகம் தார்ச் சாலையை உடைத்தனர். பின்னர், தண்ணீர் மெல்ல மெல்ல வெளியேறியது.

சாலை உடைப்பு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாற்காலிகமாக அங்கு மரப்பலகை மற்றும் குழாய் அமைக்கப்பட்டது.

இதுகுறித்து மக்களுடன் முன்னாள் எம்எல்ஏ தனபால், ஊர்ப் பிரதிநிதி கிங் உசேன் உள்ளிட்டோர் திருக்கழுகுன்றம் வட்டார வளர்ச்சி நிர்வாகத்திடம் முறையிட்டபோது, தற்காலிகமாக குழாய் மற்றும் பலகை போட்டுத் தருவதாகவும், பின்னர் சிறுபாலம் அமைத்து சாலையை சீரமைத்துத் தருவதாகவும் உறுதியளித்தது.

Leave a Response