பணமதிப்பிழப்பு: கன்னியாகுமரியில் காங்கிரஸார் நூதன போராட்டம்

marthandam_14

பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர், கறுப்பு சேலை கட்டி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு இதே தினத்தில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி இன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கிறது.

இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து, குளச்சல் சந்திப்பில் பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், அனைவரும் கறுப்பு உடை அணிந்து, பட்டை நாமம் போட்டு, திரு ஓடு ஏந்தி கடைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பணமதிப்பிழப்பு அறிவிப்பின் மூலம், பாமர மக்களை மத்திய அரசு பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளி விட்டதை உணர்த்தவே இந்த போராட்டத்தை நடத்தியதாக, அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Response