மீண்டும் உயிர்பெறும் சுவாதி கொலை வழக்கு ரூ. 3 கோடி இழப்பீடு கேட்கும் பெற்றோர்!

107661-ramkumar-swathi1

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோர் ரூபாய் மூன்று கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பரபரப்பான ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இக்கொலை தொடர்பாக ராம்குமார் என்கிற நபரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அங்கு அந்த நபர் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தங்களது மகளின் இழப்பிற்கு இழப்பீடு வழங்கக்கோரி, சுவாதியின் பெற்றோர் சந்தானகிருஷ்ணன், ரங்கநாயகி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படையின் அலட்சியம் காரணமாகவே எங்களது மகளின் கொலை நடந்துள்ளது. இதனால் ரயில்வே நிர்வாகம் எங்களுக்கு மூன்று கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று
குறிப்பிட்டு இருந்தனர்.

1470896149-7682
முன்னதாக இதைவிசாரித்த தனி நபர் நீதிபதி பெஞ்ச், ரயில்வே நிர்வாகத்திடம் இழப்பீடு கோருவோர் ரயில்வே தீர்ப்பாயத்தை அணுகவேண்டும் அது தான் முறை என்று பதிவுத்துறை சொன்ன விளக்கத்தை ஏற்று வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
மீண்டும் சுவாதியின் பெற்றோர் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், வேல்முருகன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், எட்டு லட்சம் வரை இழப்பீடு வழங்கவே தீர்ப்பாயத்திற்கு உரிமை உள்ளது. ஆனால், மூன்று கோடி இழப்பீடு கேட்டு இருக்கிறார்கள். இதனால், இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை அணுக உரிமையுள்ளது.
எனவே, இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சுவாதி கொலை வழக்கு மீண்டும் ஊடகங்களில் இடம் பெற உள்ளது.

Leave a Response