ஆறு நாட்ளாக கடலுக்கு செல்லாத தமிழக, புதுச்சேரி மீனவர்கள்!

 

33633

வடக்கிழக்குப் பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து 6 நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மீனவர்கள் தொடர்ந்து 6வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 150க்கும் மேற்பட்ட  விசைப்படகுகள், 300க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், ஆழ்கடலில் மீன்பிடிக்க பயன்படும் 250 விசைப்படகுகள் என 500க்கும் மேற்பட்ட படகுகள் தேங்காய்திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

புதுச்சேரியில் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை கடந்த 6 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மீனவர் சங்க நிர்வாகி பாஸ்கர் கூறுகையில், தொடர் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இது குறித்து புதுவை அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் எங்கள் பகுதியை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tamil-Daily-News_16680109501

இதேபோல் நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. குறிப்பாக நாகை, செல்லூர், நாகூர், வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, சின்னங்குடி, பூம்புகார், வானகிரி, பெருந்தோட்டம் , தென்னாம்பட்டி, திருமுல்லைவாசல், கொட்டாய்மேடு, பழையாறு, மற்றும் வேதாரண்யம், ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று 6வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் 500க்கும் மேற்பட்ட விசை படகுகளும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நாகை மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்

Leave a Response