38 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம்: சேலம் இடைப்பாடியில் அதிரடி

s3

சேலம் மாவட்டம்   இடைப்பாடி பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் அனுமதியின்றி செயல்பட்ட 38 சாயப்பட்டறைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. சேலம் மாவட்டம் இடைப்பாடியில் உள்ளது நைனாம்பட்டி பெரிய ஏரி. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 295 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம், ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அத்துடன் இப்பகுதியில் உள்ள கிணறு, நிலத்தடி நீர்மட்டத்துக்கும் நீராதாரமாக உள்ளது. கடந்த 2 மாதமாக, இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, பெரிய ஏரி நிரம்பியுள்ளது. இந்நிலையில் ஏரியை சுற்றிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஏரியில் கலக்குவதால் தண்ணீரில் பாசி படர்ந்து மாசடைந்துள்ளது.

dying

அத்துடன் விவசாய நிலங்களுக்குள்ளும் சாயக்கழிவுகள் புகுந்து பயிர்கள் பாதிப்படைகிறது. கிணறு மற்றும் நிலத்தடி நீரும் மாசடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நேற்று காலை சங்ககிரி ஆர்டிஓ ராமதுரைமுருகன் மற்றும் இடைப்பாடி போலீசார் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெரும்பாலான சாயப்பட்டறைகளில் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததும், அனுமதியின்றி செயல்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து சக்திநகர், ஏரி ரோடு, கா.புதூர், ஜலகண்டாபுரம் ரோடு, வெள்ளாண்டிவலசை உள்ளிட்ட பகுதியில் உள்ள 38 சாயப்பட்டறைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மேலும், 6 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாயப்பட்டறை உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த அதிகாரிகள், சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் அனுமதியின்றி செயல்பட்டால் சாயப்பட்டறைகள் முற்றிலும் அகற்றப்படும் என எச்சரித்தனர்.

 

Leave a Response