உ.பி.யில் பாய்லர் வெடித்து 25 ஊழியர்கள் பலி!!

bailar
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே உஞ்சார் என்ற இடத்தில் தேசிய அனல் மின் கழகத்தின் அனல் மின்சார நிலையம் உள்ளது.

அதில் உள்ள 5-வது புதிய மின் உற்பத்தி பிரிவில் உள்ள பாய்லர் ஒன்று, நேற்றுமாலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், கொளுந்து விட்டு எரிந்த தீயால் அடர்த்தியான புகை மூட்டம் ஏற்பட்டது. இதில் சிக்கிய தொழிலாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

இந்த கோர விபத்தில் 25 தொழிலாளர்கள் உடல் கருகி பலியானார்கள். 100க்கு மேற்பட்டவர்கள் தீக்காயம் அடைந்தனர். பாய்லர் வெடித்து தீப்பிடித்ததால் ஏற்பட்ட புகை மூட்டத்தால், மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டன. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

காயம் அடைந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அனல் மின்நிலைய மருத்துவமனையிலும், ரேபரேலி மருத்துவமனையிலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலத்த காயம் அடைந்தவர்கள், தீவிர சிகிச்சைக்காக லக்னோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து நடந்த பாய்லர் பிரிவில் மேலும் சில தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

விபத்து நடந்ததும் அனல் மின்நிலையம் மூடப்பட்டது. கடந்த 1988-ம் ஆண்டில், தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி பிரிவுகளுடன் இந்த மின் நிலையம் தொடங்கப்பட்டது. விபத்து நடந்த 6-வது பிரிவு கடந்த ஆண்டுதான் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வெடித்த பாய்லர் 30 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டதாகும்.

உ.பி. முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத், தற்போது 3 நாள் சுற்றுப்பயணமாக மொரீசியஸ் சென்று இருக்கிறார். இந்த விபத்து குறித்து அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்த அவர், பலியானவர்ளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் உதவித் தொகையாக வழங்க உத்தரவிட்டார்.

Leave a Response