மின்சாரம் தாக்கி சிறுமிகள் உயிரிழந்த விவகாரம்: அடுத்தடுத்து அரங்கேறும் விஸ்வரூப நடவடிக்கைகள்!

abd05d4c65f5a266f355499cc2af4206

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 48 மணிநேரமாக பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் இன்று காலை குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன. மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாத இரு சிறுமிகள் அந்த கம்பியை தெரியாமல் மிதித்தனர். மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் அவர்கள் இருவரும் தூக்கி எறியப்பட்டனர். இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமிகளை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். மின்சார கம்பி அறுந்து விழுந்து கிடப்பது தொடர்பாக அப்பகுதியில் உள்ள மின்வாரிய அதிகாரிகளுக்கு புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்த சோகச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஆர்.ஆர். நகர் பகுதி பொதுமக்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர். மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணைக்கு அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டுள்ளார். . இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார், இறந்த சிறுமிகளின் பெயர் மகா (9) மற்றும் பாவனா (8) என்று தெரிவித்துள்ளனர்.

மின்வாரிய ஊழியர்கள் பணியிடை நீக்கம் :

இதையடுத்து, மின்பெட்டிகளை முறையாக கண்காணிக்காமலும் மக்களின் புகாரை கருத்தில் கொள்ளாமலும் அலட்சியமாக நடந்துகொண்ட வியாசர்பாடி மின்வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட 3 அதிகாரிகளும் 5 மின்வாரிய ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மின்சாரப் பெட்டிகள், மின்கம்பிகள் ஆகியவற்றை முறையாக பார்வையிட்டு சரிசெய்ய இட்ட உத்தரவையும் மக்களின் புகார்களையும் அலட்சியப்படுத்தி முறையாக நடவடிக்கை எடுக்காததால் 3 அதிகாரிகளையும் 5 ஊழியர்களையும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பணியிடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

பணியில் கவனக்குறைவாக இருந்தது மின்வாரிய அதிகாரிகள்:

பணியில் கவனக்குறைவாக இருந்தது மின்வாரிய அதிகாரிகள்தான் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். என் வீட்டுக்கு 24 மணி நேரமும் அழைக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். பல ஆய்வுக்கூட்டம் நடத்தி மழை தடுப்புப் பணி குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன் என்றும் மழை நீரில் வயர் மூழ்கியதால் மின்கசிவு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் சென்னையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் 5 பேர் கொண்ட குழு சென்னை முழுவதும் ஆய்வு செய்யும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் கொதித்த கமல்ஹாசன்!

கொடுங்கையூரில் குழந்தைகள் இறந்ததற்கு நிதியும் அனுதாபமும் போதாது என்று கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இனியும் நிகழாதிருக்க ஆவணம் செய்ய வேண்டும் என்று கமல் வலியுறுத்தியள்ளார்.

அரசு நிவாரண நிதி அறிவிப்பு:

இந்நிலையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. மின்துறை சார்பில் சிறுமிகளின் குடும்பத்திற்கு நிதியுதவியை அமைச்சர் தங்கமணி அறிவித்தார்.

உறுதியளித்த மாவட்ட ஆட்சியர்:

மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

உயிரிழந்த 2 சிறுமிகளின் உடலுக்கு அமைச்சர் தங்கமணி அஞ்சலி :

சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 2 சிறுமிகளின் உடலுக்கு அமைச்சர் தங்கமணி அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னை ஸ்டாலி மருத்துவமனையில் உள்ள சிறுமிகளின் உடலுக்கு நேரில் சென்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Leave a Response