ஜெட்லி தொடுத்த அவதூறு வழக்கு : கெஜ்ரிவால் மனு தள்ளுபடி!

93f18867-422d-4392-bf5f-8015cbf394d0

அருண் ஜெட்லி தொடுத்த அவதூறு வழக்கில் கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராக 2000 முதல் 2003-ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பதவி வகித்த காலத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் கெஜ்ரிவால்  மற்றும் ராகவ் சதா,  குமார் விஷ்வாஸ்,  ஆஷுதோஷ்,  சஞ்சய் சிங்,  தீபக் பாஜ்பாய்  ஆகிய 6 பேர் மீது ஜெட்லி அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த மே மாதம் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி விவாதத்தின் போது ஜெட்லி குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கெஜ்ரிவாலுடன் ஏற்பட்ட மோதலால் வழக்கில் இருந்து ஜெத்மலானி விலகினார்.

இந்த சூழலில் 1999 முதல் 2014ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் கிரிக்கெட் சங்க கூட்ட நிகழ்வுகளின் விவரங்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்யும்படி கெஜ்ரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை தாமதப்படுத்தும் நோக்கிலேயே கெஜ்ரிவால் இது போன்ற மனுவை தாக்கல் செய்துள்ளதாக ஜெட்லி தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

Leave a Response