வலுவடைந்திருக்கும் வடகிழக்கு பருவமழை: கனமழை தொடரும்!

Rain_Bike_17570
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை மேலும் வலுவடைந்திருப்பதாகவும், வட மற்றும் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் கன மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
வடகிழக்குப் பருவ மழை தொடங்கி ஒரு சில நாட்களிலேயே, தமிழகத்தில் பருவ மழை வலுவடைந்திருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், முதல் நாள் மழைக்கே சென்னை மாநகரம் ஸ்தம்பித்துப் போனது.
மழை நீர் வடிகால்வாய்கள் அனைத்தும் கழிவுகளால் மூடப்பட்டதால், சாலைகளே ஆறுகளாக மாறின. சாலைகளும் செப்பனிட்டு சீராக இருந்திருந்தால் வெள்ள நீர் மட்டுமே சவாலாக இருக்கும். ஆனால், சாலைகளில் காணப்படும் படுகுழிகள் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தின. சென்னையின் புறநகர்ப் பகுதியான முடிச்சூர் வெள்ளக்காடானது.

Rain_Road_17574
பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் இன்று மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது, வடகிழக்குப் பருவ மழை தமிழகத்தில் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.
இலங்கைக்கும் மன்னார் வளைகுடாப் பகுதிக்கும் இடையே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது இலங்கை மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களிலும், தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் பரவலாக மழை பெய்யும்.

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். கன மழையைப் பொறுத்த வரை கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யும். வட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் தவிர ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னையைப் பொறுத்தவரை அவ்வப்போது இடைவெளி விட்டு சில முறை மழை பெய்யும். ஓரிரு முறை வலுவான மழை பெய்யும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Response