ஒரே நாளில் 316 மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணை : முதல்வர் வழங்கினார்.

doctorjpg
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 316 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 100 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்.27) வழங்கினார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பி, அரசு மருத்துவ நிலையங்களுக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு தங்குதடையின்றி மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டுமென்ற உயரிய நோக்கத்திற்காக, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைக்கென தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ஜனவரி 2012-ல் துவக்கப்பட்டது. இவ்வாரியம் இதுவரை தேர்வு செய்துள்ள 10,093 மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள், 9,190 செவிலியர்கள்

மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள் உட்பட 22,358 பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தற்போது 316 உதவி மருத்துவர்களை புதியதாக தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை

வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் 100 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, “தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களில் இருக்கும் பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தில் அதிகமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டன.

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்கப்பட்டு, 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி ஆங்காங்கே இருக்கின்ற பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கக்கூடிய நிலை உருவாக்கப்பட்டது. 22,358 பணியிடங்கள் இதுவரை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக நிரப்பப்பட்டிருக்கின்றது.

இன்றையதினம் 316 புதிய உதவி மருத்துவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிவதற்கு நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை

அமைச்சர் குறிப்பிட்டதைப் போல, தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலி உதவி மருத்துவர்கள் இல்லை என்ற நிலை இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இன்றைக்கு தமிழகத்திலே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து மருத்துவமனையிலும், உதவி மருத்துவர் பணியிட காலியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டிருக்கின்றன. கிராமப்புற மக்களுக்குத் தேவையான உரிய சிகிச்சை அளிப்பதற்காக உதவி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவர்

பணியிடங்களெல்லாம் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது. அதேபோல் உதவி மருத்துவர்களாக இன்றைக்கு பணி ஆணை பெற இருக்கின்ற சகோதர, சகோதரிகள்

தங்களுடைய கடமைகளை உணர்ந்து மக்களுக்கு சேவை புரிய வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றவர்கள் ஏழை, எளிய மக்கள். ஆகவே, அப்படிப்பட்ட மக்களுக்கு இதமாக பேசி, உரிய சிகிச்சை அளித்து, அவர்களுக்கு பூரண குணமடைய செய்வதற்குண்டான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, தற்போது டெங்கு காய்ச்சல் படிப்படியாக குறைந்து கொண்டிருந்தாலும், ஆங்காங்கே இன்னும் ஒரு சில இடத்திலே இருப்பதாக தகவல் வருகின்றது. ஆகவே பணி ஆணை பெறுகின்ற உதவி மருத்துவர்கள் தங்கள் பகுதியிலே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ரத்த பரிசோதனை செய்து அதற்குண்டான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பணி நியமனம் பெறுகின்ற உதவி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற வேண்டும்.” என்று வாழ்த்தினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response