நிலவேம்பு விவகாரம்: கமல் மீது வழக்குப்பதிய உயர்நீதிமன்றம் அனுமதி

kamalhaasan

நிலவேம்பு கசாயம் தொடர்பாக கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் கமல் மீது வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நிலவேம்பு கசாயம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தகவல் வெளியிட்டு இருந்தார். அதில் சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை ரசிகர்கள் நிலவேம்பு வினியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று கூறியிருந்தார்.

அவரது கருத்துக்கு சென்னை செம்பியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கமல் மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக வந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு அளித்து வரும் நிலவேம்பு கசாயம் நல்ல பலனை அளித்து வருகிறது. அதனை குடித்து யாரும் பக்கவிளைவை சந்திக்கவில்லை. காய்ச்சல், வி‌ஷ காய்ச்சல், டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் மிக பெரிய நம்பிக்கையை தரும் மருந்தாக உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் “நிலவேம்பு கசாயம் குறித்து ஆராய்ச்சி முடிவுகள் வரும்வரை இயக்கத்தினர் நிலவேம்பு கசாயம் வினியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

எனவே கமலின் டுவிட்டர் பக்கத்தை நீக்க வேண்டும். அதேநேரத்தில் தமிழக இறையாண்மைக்கு எதிராகவும், பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபராகவும், டெங்கு காய்ச்சலுக்கு அரசு எடுத்து வரும் நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவலை சொல்லி இருக்கிறார்.

தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் தவறான செயல்களை செய்து வரும் கமலை உடனடியாக கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று நீதிபதி முன்னால் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிலவேம்பு
கசாயம் தொடர்பாக கருத்து தெரிவித்த கமல்ஹாசன் கருத்தில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் நிலவேம்பு குறித்த முடிவுகளை பெறப்பட்டு அதனை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

கமல் கருத்தில் முகாந்திரம் இல்லாத பட்சத்தில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்

Leave a Response