கந்து வட்டிக்கு எதிரான சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

கந்துவட்டிக்கு எதிரான சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கரூரில் பா.ஜ.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஏற்பட்டு இருக்கும் வெற்றிடத்தை பா.ஜ.க. மட்டுமே நிரப்பும். இதைத்தான் மக்களும் எதிர் பார்க்கிறார்கள். தி.மு.க.வை மக்கள் வெறுக்கிறார்கள். எந்த கட்சியில் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் விலகி தி.மு.க.வில் சேரவில்லை. மாறாக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலர் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர்.

பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட நாளை கருப்பு தினமாக தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் அனுசரிக்கப்போவதாக அறிவித்துள்ளதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை.

ஈ.வெ.ரா. உயிருடன் இருந்த காலத்தில் கருப்பு சட்டையை தூக்கி எறிந்தவர்கள் இப்போது வேறு ஒரு காரணத்தை சொல்லி மீண்டும் கருப்பு சட்டையை அணிய உள்ளனர்.

தற்போது அவர் உயிருடன் இருந்திருந்தால் தி.மு.க.வின் செயலை கண்டு கண்ணீர் வடித்திருப்பார். தமிழகத்தில் எந்த பிரச்சனைகளையும் கண்டு கொள்ளாமல் அ.தி.மு.க.வினர் அவர்களது பிரச்சனையை தீர்க்க போராடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கந்து வட்டி கொடுமையால் நெல்லையில் 4 பேர் தீக்குளித்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. பணத்தை பாதி திருப்பி கொடுத்த பின்பும், அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் தீர்வு கிடைக்காததால் ஒரு குடும்பம் தீக்குளித்து பலியாகியிருக்கிறது. கந்து வட்டிக்கு எதிராக தமிழகத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

முதல்-அமைச்சர் முன்னிலையிலேயே தீக்குளிக்க முயன்று, தங்களது கோரிக்கையை சொல்கிற அளவிற்கு தற்போதைய சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

நெல்லையில் தீக்குளித்த அந்த குடும்பத்திற்கு என்ன உதவிகள் செய்ய வேண்டுமோ? அதனை செய்ய வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகளை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இது போன்று பொதுமக்கள் யாரும் தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபடாதீர்கள்.

ஏழை, எளிய மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் வாழ்க்கையில் முன்னேற முத்ரா வங்கி திட்டம் உள்ளது. முத்ரா வங்கி கடன் திட்டம் சரியான முறையில் மக்களுக்கு சென்றடைய வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் முறைப்படுத்தப்பட வேண்டும்.

கெயில் திட்டத்தை பொறுத்தவரை, அது மத்திய அரசு ஒப்புக்கொண்ட திட்டம். மக்களின் எதிர்ப்பை மீறி இத்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது பா.ஜ.க.வின் நோக்கமல்ல. மக்களின் அச்சத்தை போக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மக்களுக்கு பயன்தரும் திட்டம். இதனால் பயப்பட தேவையில்லை.

‘மெர்சல்’ பட விவகாரத்தை ‘கட்’ பண்ணிவிட்டோம், அது சுபமாக முடிந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் விருப்பம்.

இணையதளத்தில் பா.ஜ.க. தலைவர்கள் பற்றி தவறான தகவல்களை பதிவிட்டு விமர்சனம் செய்கின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் இணையதளத்தில் விமர்சிப்பதை விட்டு, களத்தில் நேரடியாக தங்களை அடையாளப்படுத்தி போராட வேண்டும். அதனை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

எனது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பலர் மிரட்டி வருகின்றனர். இதனைக்கண்டு நான் பயப்பட போவதில்லை. எந்த சலசலப்புக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். திருமாவளவன் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என நான் கூறியதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

201606290936409625_honestly-want-to-investigate--swathi-murder-case-h-raja_SECVPF

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறும் போது, தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கடந்த 2 நாட்களாக நடத்தி வரும் போராட்டம் அநாகரீகமானது. விடுதலை சிறுத்தைகள் என்றாலே வன்முறை, கட்டப்பஞ்சாயத்து, ரவுடீசம் என மக்களிடம் மறு பெயர் உள்ளது.

அரசியலில் நல்லதொரு நிலையை அடைய வேண்டும் என்றால் திருமாவளவன் தனது நிலைபாட்டினை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Response