90% ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை செய்வதில்லை; முதல்வர் கெஜ்ரிவால் பகீர் குற்றச்சாட்டு

 

டெல்லி மாநில அரசில் உள்ள 90 சதவீத இந்திய குடிமைப் பணி  (ஐஏஎஸ்) அதிகாரிகள் வேலை செய்வதில்லை. கோப்புகளை உரிய நேரத்தில் பார்த்து அனுப்புவதில்லை, காலதாமதம் செய்கின்றனர் என முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

arvind-kejriwal

 

கடந்த 2014ல் கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தது முதல், டெல்லி மாநில அரசின் அதிகார வரம்பு தொடர்பாக மத்திய அரசு, ஆளுநர், உயரதிகாரிகள்(ஐஏஎஸ் அதிகாரிகள்) இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. முக்கிய பொறுப்புகளுக்கு உயரதிகாரிகளை நியமனம் செய்வது, திட்டங்கள் நிறைவேற்றுவது உள்ளிட்டவற்றில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உள்ளது என்பது கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் வாதம். ஆனால், அரசியலமைப்பு சட்டத்தின் படி, மத்திய அரசு மற்றும் அதன் பிரதிநிதியான துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் என்பது எதிர்தரப்பு வாதமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதனால் முதல்வர் கெஜ்ரிவால் ஆட்சி பொறுப்பேற்றது முதலே கவர்னர் மற்றும் மத்திய அரசுடன் இணைக்கமான சூழல் இல்லை. அதோடு, மாநிலத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சக கட்டுபாட்டில் உள்ளதால் அவர்களும் மாநில அரசின் விருப்பத்திற்கேற்ப பணியாற்றுவதில்லை என ஆம் ஆத்மியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக  குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Arvind_Kejriwal

கடந்த 2015ம் ஆண்டு டெல்லி மாநில அரசின் தலைமை செயலாளராக இருந்த கே.கே.சர்மா விடுப்பில் சென்றபோது, அவருக்கு பதிலாக தற்காலிக தலைமை செயலாளராக (பொறுப்பு) மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகுந்தலா காம்ளின் அப்போதைய டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கால் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் மாநில அரசிடம் கலந்தாலோசிக்காமல் பொறுப்பு தலைமை செயலர் நியமிக்கப்பட்டதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். அதோடு, காம்ளின் நியமனம் தொடர்பான  ஆணையில் கையெழுத்திட்ட  முதன்மைச் செயலாளர் (சேவைகள்) அமிந்தோ மஜும்தாரை  கெஜ்ரிவால் பதவியில் இருந்து நீக்கினார்.

 

ஐஏஎஸ் அதிகாரிகள் ஏசி அறையில் அமர்ந்து பணி செய்யாமல் களப் பணியில் ஈடுபட வேண்டும் என காட்டமாக கெஜ்ரிவால் கூறினார். இதேபோன்று, அரசு நிலத்தை ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு ஒதுக்கிய விவகாரத்திலும் மோதல் வெடித்தது. இதுதொடர்பான ஆணையை ரத்து செய்த பொதுப் பணித்துறை செயலாளர் அஷ்வினி குமார் மீதான கோபத்தில், அவரை கால்வாய் தூர்வாரும் பணிகளை நேரில்  பார்வையிட கெஜ்ரிவால் உத்தரவிட்டார். ஆனால் அவர் அதை நிறைவேற்றவில்லை. பணியில் அலட்சியம் காட்டி வரும் அஷ்வினி குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமை செயலருக்கு கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.

 

கடந்த வாரம் டெல்லி  மெட்ரோ ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போது அது குறித்து ஆய்வு செய்ய இடபட்ட உத்தரவையும் தலைமை செயலாளர் எம் எம் குட்டி  நிறைவேற்ற மறுத்து விட்டார் என்றும் அவர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்றும் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் நேரடியாக குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில், மின்துறை ஓய்வூதிய பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நேற்று கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர், 90 சதவீத ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை செய்வதில்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

kejriwal_12

இதுபற்றி  கெஜ்ரிவால் மேலும் பேசியதாவது:

“டெல்லி மாநிலத்தில் பணியாற்றும் 90 சதவீத ஐஏஎஸ் அதிகாரிகள் முழுமையாக பணியாற்றுவது இல்லை. இதனால் தலைமை செயலகத்தில் பணிகள் முடங்கி கிடக்கின்றன.  கோப்புகளை படித்து திருப்பி அனுப்பாமல் அப்படியே வைத்து கொள்கிறார்கள். இதனால் நீண்ட காலதாமதம் ஆகிறது.  புதுடெல்லி நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களின் பணிகளை முறைப்படுத்த விரும்பினேன். அதன் தலைவர் என்ற முறையில் நான் எடுத்த முடிவுக்கு அனைத்து அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தங்களது எதிர்ப்பையும் மீறி பணிவரன் செய்யப்பட்டால், வேலை செய்ய மாட்டோம் என கூறுகின்றனர். இவர்களது பணிவரன் குறித்த வரைவு அறிவிக்கையை துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் மீண்டும் அதை தடுக்க முயற்சித்தால், ஒப்பந்த தொழிலாளர்கள் அவர்களுக்கு உரிய பாடத்தை புகட்டுவார்கள். மருத்துவ சேவை திட்டத்துக்கும் அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.   தற்காலிக ஆசிரியர்களின் பணிவரன் முறை கோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி இது துணை நிலை ஆளுநருக்கும், கவுரவ ஆசிரியர்களுக்கும் இடையிலானது. அவர்களே பிரச்னையை தீர்த்து கொள்ளட்டும். அரசின் பணி முடிந்து விட்டது”. இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

Leave a Response