தெலுங்கில் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில், கடந்த மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜூன் ரெட்டி’. இந்தப் படம் வெளியானதிலிருந்தே படத்தைப் பார்த்த அனைவரும் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. தெலுங்கில் இந்தப் படம் ரிலீஸாகியிருந்தாலும் உலகெங்கிலும் இருக்கும் சினிமா ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் இந்தப் படத்துக்கான தமிழ் மற்றும் மலையாளம் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பலரும் போட்டி போட்டு வரும் நிலையில் கேரள நிறுவனமான இ4 என்டர்டைன்மென்ட் இரண்டு மொழி உரிமையை வாங்கியுள்ளது.
மேலும், ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விக்ரம் வெளியிட்டு இருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நிலையில் இந்தப் படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பது இதுவரை சஸ்பென்ஸாகயிருந்தது.
தற்போது அந்த சஸ்பென்ஸை உடைத்திருக்கிறார் விக்ரம். விக்ரமுக்கு தன் முதல் படத்தின் மூலமே பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்த இயக்குநர் பாலா தான் விக்ரமின் மகன் துருவ்வின் படத்தையும் இயக்க இருக்கிறார்.