செய்தி இணையதளத்தின் மீது ரூ.100 கோடி அவதூறு வழக்கு தொடர்கிறார் அமித் ஷாவின் மகன்

Amit and Jayjpg

செய்தி இணையதளத்தின் மீது ரூ.100 கோடி அவதூறு வழக்கு தொடர்கிறார் அமித் ஷாவின் மகன்.

பாஜக தேசியத்தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் வருமானம் ஒரேவருடத்தில் 16,000 மடங்கு அதிகரித்துள்ளதாக செய்தி வெளியிட்டது தி வயர் (The Wire) இணையதளம். இந்நிலையில், அதன் மீது ரூ.100 கோடி அவதூறு வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார் ஜெய் ஷா.

ஜெய் ஷா மீதான குற்றச்சாட்டை மறுத்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தி வயர் இணையதளத்தின் உரிமையாளர், செய்தி ஆசிரியர் மற்றும் குறிப்பிட்ட கட்டுரையை எழுதியவர்கள் மீது ஜெய் ஷா வழக்கு தொடரவிருக்கிறார். சிவில், கிரிமினல் அவதூறு வழக்குகளை அவர் தொடர்வார்” என்றார்.

கம்பெனி பதிவுத்துறையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜெய் ஷாவின் நிறுவனம் நட்டத்தில் இயங்கியபோது ரூ.25 கோடி வங்கிக்கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது வயர் இணையதளம்.

ஆனால், ஜெய் ஷா அத்தொகையை வங்கிக் கடனாகப் பெறவில்லை லெட்டர் ஆஃப் கிரெடிட் ஆகவே பெற்றார் எனக் கூறுகிறார் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.

பாஜக ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அதன் மிகப்பெரிய ஆளுமையாக உள்ள அமித் ஷாவின் மகன் இத்தகைய சர்ச்சைக்குள் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Response