எம்ஜிஆரின் நூற்றாண்டு கடந்த ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டம் சேர்க்க:-
முதல்வர், துணை முதல்வர் கலந்து கொள்ளும் விழாக்களில் கூட்டத்தை சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், அங்குள்ள நாற்காலிகளை நிரப்புவதற்காகவும் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உணவில்லாமல்:-
அவ்வாறு பயன்படுத்தப்படும் மாணவர்கள் காலை முதல் மாலை வரை உணவு கூட அளிக்காமல் உட்கார வைக்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சேலத்தில் வரும் 30-ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்களை பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று மாற்றம் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆசிரியர் மீது மட்டும் நடவடிக்கை:-
அந்த வழக்கில், அரசு விழாக்களுக்கு குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது தீவிபத்து, நெரிசல், பாலியல் தொல்லை, காணாமல் போவது உள்ளிட்டவை நடந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆட்சியர் மீதோ, அரசியல்வாதிகள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மேலும் குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் வழிமுறைகளை வகுக்கும் வரை மாணவர்களை வெளியே அழைத்து செல்ல தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தடை விதிப்பு:-
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது நீதிபதிகள், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல தடை விதித்தனர். மேலும் இந்த வழக்கு முடியும் வரை குழந்தைகளை எந்தவிதமாக அரசுவிழாக்களும் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.