லிப்ரா குறும்பட போட்டி- முதல் பரிசை தட்டிச் செல்லும் குறும்படம் எது?

Libra-01

நளனும் நந்தினியும், சுட்ட கதை, நட்புன்னா என்னான்னு தெரியுமா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள லிப்ரா புரடக்சன்ஸ் நிறுவனம், தற்போது குறும்பட இயக்குனர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.

இந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு கடந்த ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரடக்சன்ஸ். அந்தவிதமாக போட்டிக்கு வந்த 946 படங்களில் இருந்து சிறந்த 53 குறும்படங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

lipraa

இந்த53 குறும்படங்களையும் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் கொண்ட குழு பரிசீலித்து அதில் சிறந்த பத்து குறும்படங்களை தேர்ந்தெடுப்பார்கள்.. மிகச்சிறந்த குறும்படம் என்கிற ஒரு பிரிவில் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த குறும்பட இயக்குனர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என இந்த 53 குறும்படங்களில் இருந்தே பல பிரிவுகளிலும் போட்டியாளர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்..

இந்த விருது வழங்கும் விழா வரும் நவ-19ஆம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள், முதல் பத்து பரிசுகளுக்கு தகுதியான குறும்படங்கள் பற்றிய விபரங்கள் அன்றைய தினம் விழா மேடையில் வைத்து அறிவிக்கப்படும்.

முதல் பரிசாக 10 லட்சம், 2ஆம் பரிசாக 7 லட்சம் மற்றும் 3ஆம் பரிசாக 5 லட்சம் ரூபாய் என பரிசு தொகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இதில் இன்னொரு சிறப்பு அம்சமாக மீதி உள்ள ஏழு குறும்படங்களுக்கும் சிறப்பு பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இந்த விழாவை தொடர்ந்து நடத்துவது குறித்து லிப்ரா புரடக்சன்ஸ் ரவீந்தர சந்திரசேகரன் கூறுகையில்:-

“குறும்பட விழாக்கள் நடத்துறது ஒரு சேவை மட்டுமல்ல.. இதுக்கு வர்த்தக ரீதியா ஒரு ஓப்பனிங் இருக்குது.. அதேசமயம் பணம், லாபம் அப்படிங்கிறத தாண்டி இந்த குறும்பட விழா மூலமா திரையுலகுக்கு நிறைய டெக்னீசியன்களை அறிமுகப்படுத்துறோம்..

என்னால எல்லோருக்கும் படம் கொடுக்க முடியாது.. ஆனா அவங்களுக்கு படம் கிடைக்கிறதுக்கான வாய்ப்பையும் அவங்களுக்கான பாராட்டையும் ஏற்படுத்தி தரமுடியும்.. நாளைக்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அங்கே லிப்ரா விருது வாங்கிருக்கேன்னு அவங்க அதை ஒரு அங்கீகாரமா சொல்லுவாங்கள்ல.. வருங்காலத்துல லிப்ரா அவார்ட்ஸ் அப்படின்னா திரையுலகத்துல மிக மரியாதையான ஒரு விஷயமா மாறனும்.. இதுதான் இந்த குறும்பட விருது விழா நடத்துறதோட நோக்கம்.” என்கிறார் தெள்ளத்தெளிவாக.

Leave a Response