அதிமுக அணிகள் இணைப்பு தாமதத்திற்கு இந்த இரண்டு விஷயங்கள் தான் காரணமா ?

edapad-palanisamy-ops53453
அதிமுக அணிகள் இரண்டும் நேற்று இணைந்து விடும், விடிந்தால் புதிய அதிமுகவைக் காணலாம் என்று அதிமுக தொண்டர்கள் ஆர்வமாக காத்திருந்நிலையில் இரண்டு காரணங்களுக்காக நேற்று கடைசி நேரத்தில் தாமதம் ஏற்பட்டு விட்டதாக தற்போது பேச்சு அடிபடுகிறது.

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தரப்பில் ஆரம்பத்திலிருந்தே நிதானமாகத்தான் எல்லாவற்றையும் செய்து வருகின்றனர். எந்த வகையிலும் குழப்பம் ஆகி விடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதையுடன்தான் எதையும் செய்கின்றனர். இந்த நிலையில் நேற்றும் கூட சில விஷயங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் அதில் ஏற்பட்ட இழுபறிதான் நேற்று கடைசி நேரத்தில் அதிமுக இணைப்பு தாமதமாக காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஓபிஎஸ்ஸுக்கு பொதுச்செயலர் பதவி தருகிறோம், 2 நாட்களில் பொதுக்குழுவை கூட்டி சசிகலா நீக்கம்; ஓபிஎஸ் பொதுச்செயலர் என அறிவிக்கிறோம். தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை வாபஸ் வாங்குகிறோம். இந்த 2 விஷயங்களையும் ஜெ. சமாதியில் ஈபிஎஸ் அறிவிப்பார் என உறுதி தந்தால் சமாதிக்கு போகலாம் என ஓபிஎஸ் அணி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் எடப்பாடி தரப்பில் இருந்து க்ரீன் சிக்னல் கிடைக்காததால் இணைப்பு நடைபெறவில்லை என்கிறார்கள்.

நேற்று மாலை 4 மணி முதலே இணைப்பு தொடர்பான கடைசி நிமிடப் பேச்சுக்கள் களை கட்டியிருந்தன. இதனால் அதிமுக தொண்டர்கள் படு உற்சாகமாகக் காணப்பட்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர்களிடம் உற்சாகம் தொற்ற ஆரம்பித்திருந்தது. இணைந்தால் கிடைக்கப் போகும் பலன்களை நினைத்து மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

தற்போது சசிகலா நீக்கம் தொடர்பாகவும் சில இழுபறிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. சசிகலாவை நீக்குவது தொடர்பான அல்லது சசிகலாவை அதிமுகவை விட்டு விலக்கி வைப்பது தொடர்பான அறிவிப்பும் வந்தால் நல்லது என்று ஓ.பி.எஸ். அணியிலிருந்து எடப்பாடியார் தரப்புக்கு செய்தி போயுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இதுகுறித்தும் முதல்வர் எடப்பாடி தரப்போகும் உறுதிமொழியை வைத்துத்தான் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அமையும் என்று கூறப்படுகிறது.

மற்றபடி அமைச்சர் பதவி தொடர்பாக பெரிய அளவில் சிக்கல் இல்லை என்கிறார்கள். தேவைப்பட்டால் ஓ.பி.எஸ். தரப்பில் சிலருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவும் முதல்வர் எடப்பாடி தரப்பு தயாராக உள்ளதாகவும், அதில் பெரிய சிக்கலே இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து பதவியைக் காரணமாக வைத்து பெரிய அளவில் நிர்ப்பந்தம் இல்லை என்றும் சசிகலா தான் உண்மையான சிக்கல் என்றும் சொல்லப்படுகிறது. விரைவில் சிக்கல் தீர்ந்து இரு தரப்பும் இணையும் என்ற நம்பிக்கையில். தொண்டர்கள் காத்துள்ளனர்.

Leave a Response