சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு தயாராகும் புனித ஜார்ஜ் கோட்டை!

independence

நாட்டின் 71-வது சுதந்திர தின விழா, வரும் 15-ம் தேதி நாடு முழு வதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் விழா நடக்கிறது. முதல்வர் கே.பழனிசாமி முதல்முறையாக தேசியக் கொடியேற்றி வைத்து அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகளை வழங்குகிறார்.

தமிழகத்தில் கடந்த 1989 முதல் 2016-ம் ஆண்டு வரை கருணாநிதி, ஜெயலலிதா இருவர் மட்டுமே மாறி மாறி முதல்வராக இருந்தனர். அவர்களே, சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடி யேற்றி வந்தனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த குடியரசு தின நிகழ்ச்சியில், அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிராவில் கொடியேற்ற வேண்டும் என்பதால், தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வமே கொடியேற்றி வைத்து, அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தற்போது முதல்வராக கே.பழனிசாமி உள்ளார். இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் இவர் முதல்முறையாக கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார்.

சுதந்திர தின விழாவுக்காக புனித ஜார்ஜ் கோட்டை தயாராகி வருகிறது. கோட்டை கொத்தளம் பகுதியில் மேடை அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. அதன் எதிரில் பார்வையாளர்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்கான மேடைகளும் அமைக்கப்படுகின்றன.

விழா ஏற்பாடுகளை தமிழக பொதுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து செய்து வருகிறது. இப்பணிகள் முடிந்ததும் அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட உள்ளது.

Leave a Response