கச்சா எண்ணெயை ஏற்றி வரும் கப்பல்களிலிருந்து விபத்து காரணமாக எண்ணெய் கசிவு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னை அருகே கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ஒரு கப்பல் மற்றொரு சரக்குக் கப்பலுடன் மோதியது. இதனால் கடலில் சிந்திய கச்சா எண்ணெயை அகற்ற முடியாமல் திணறினர். இதனால் அப்பகுதியில் நீர்வாழ் உயிரினங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயின. சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டது.
ஐஐஎஸ்இஆர் -ல் பணிபுரியும் பேராசிரியர் கானா எம்.சுரேஷன் தலைமையிலான 2 பேர் குழு ஹைட்ரோபோபிக் உறிஞ்சியை கண்டுபிடித்துள்ளது. இது நீர்பரப்பில் சிந்தும் கச்சா எண்ணெய் படலத்தை அப்படியே உறிஞ்சி உறைய வைத்துவிடும். மலிவாகக் கிடைக்கும் மூலப் பொருள் (மன்னி டோல்) மற்றும் செல்லுலோஸ் கூழ் ஆகியவற்றைக் கொண்டு இந்த உறிஞ்சி தயாரிக்கப்படுகிறது.
மற்ற முறைகளைப் போல அல்லாமல், தண்ணீருடன் கலந்துள்ள கச்சா எண்ணெயின் மீது இந்த உறிஞ்சியை சுலபமாக தெளித்து கச்சா எண்ணெயை பிரித்தெடுக்க முடியும். இதற்கென தனியாக கரைப்பான் எதுவும் தேவையில்லை. இதனால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
‘பாம்பே ஹை’ உட்பட மொத்தம் 6 விதமான கச்சா எண்ணெயைக் கொண்டு உறிஞ்சும் தன்மையை விஞ்ஞானிகள் பரிசோதித்துப் பார்த்துள்ளனர். வெவ்வெறு பாகு தன்மை கொண்டதாக இந்த எண்ணெய்கள் இருந்த போதிலும், 30 நிமிடம் முதல் 2 மணி நேரத்துக்குள் உறிஞ்ச முடியும் என சோதனையில் தெரியவந்தது. இவ்வாறு உறிஞ்சப்பட்டு உரை நிலையில் உள்ள கச்சா எண்ணெயை எளிய வடித்தல் முறையின் மூலம் மீட்க முடியும் என்றும் கண்டறிந்துள்ளனர்.
இதகுறித்து பேராசிரியர் சுரேஷன் கூறும்போது, “கடல் பரப்பில் கச்சா எண்ணெய் சிந்தியவுடன் விரைவாக பரவும் என்பதால், தண்ணீரிலிருந்து எண்ணெயை உடனடியாக பிரித்தெடுக்க இந்த உறிஞ்சி மிகவும் அவசியம். இந்த உறிஞ்சியை தெளித்து 30 நிமிடம் முதல் 2 மணி நேரத்துக்குள் தண்ணீரிலிருந்து கச்சா எண்ணெயை தனியாக பிரித்து உறிஞ்சிவிடும். நீர்பரப்பு எப்போதும்போல் தூய்மையாகி விடும்” என்றார்.