அப்துல்கலாம் மணிமண்டபத்தை திறந்து வைத்த பாரத பிரதமர் !

s
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்த பிரதமர், பிறகு, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டப முகாம் வந்தடைந்தார். தமிழக முதல்வர், ஆளுநர், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக செயலர் ஹச்.ராஜா ஆகியோர் வரவேற்றனர்.

முதலில் கலாம் நினைவு மணி மண்டபத்துக்கு முன்புள்ள தேசியக் கொடியை ஏற்றினார் மோடி. பிறகு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடத்தில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 2015 ஜூலை 27-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இங்கு, கலாம் நினைவு மணிமண்டபம் கட்டப்படும் என 2015-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, சுமார் ரூ.20 கோடி மதிப்பில், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (டிஆர்டிஓ) சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

அடுத்ததாக கலாம் வீணை வாசிப்பது போன்ற சிலையைத் திறந்துவைத்தார். அவருடன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவ், முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் உடனிருந்தனர்.

சிலை திறப்புக்குப் பிறகு கலாமின் கல்லறைக்கு மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கலாம் சகோதரர் மற்றும் குடும்பத்தினரை மோடி சந்தித்துப் பேசினார்.
s2
அக்னி ஏவுகணை மாதிரி, கலாம் பயன்படுத்திய பொருட்கள் ஆகிவற்றையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். குடியரசுத் தலைவராக கலாம் பதவியேற்றபோது குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் வருவது, சகோதரர் முத்து மீரா மரைக்காயர், உலகத் தலைவர்கள் மற்றும் குழந்தைகளுடன் கலாம் இருக்கும் ஓவியங்கள், மேலும், குழந்தைகளுடன் கலாம் விளையாடுவது, குழந்தைகளுடன் கிரகங்களை பார்வையிடுவது, குழந்தைகளை புத்தகங்கள் படிக்கத் தூண்டுவது, குழந்தைகளை கைதூக்கி உதவுவது ஆகிய சிலைகளையும் மோடி பார்வையிட்டார்.

பிரதமரின் ராமேசுவரம் வருகையையொட்டி 3 ஐ.ஜி.கள், 4 டி.ஐ.ஜி.கள், 9 எஸ்.பி.கள், 21 ஏ.டி.எஸ்.பி.கள், 34 டி.எஸ்.பி.க்கள் மற்றும் மத்திய, மாநில உளவுப் பிரிவினர் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Response