அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு தொடங்க ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு : அமைச்சர் அறிவிப்பு!

senk
விருதுநகர் கே.வி.எஸ். பள்ளி வளாகத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாளையொட்டி கல்வித் திருவிழா நடைபெற்றது.

நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை தாங்கினார். த.மா.கா. ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் என்.எஸ்.வி. சித்தன் விழாவை தொடங்கி வைத்தார்.

விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது:-

ஆண்டுதோறும் தமிழ்வழி கல்வியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகள், மாவட்டத்திற்கு 30 பேர் வீதம் 32 மாவட்டங்களுக்கும் 960 மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த இந்த அறிவிப்பை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 15 மாணவர்களுக்கு காமராஜர் விருதுடன், ரூ. 10 ஆயிரமும் பிளஸ்-2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 15 மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருதுடன் ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும்.

அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் தொடங்க ரூ. 60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மாணவ- மாணவிகளுக்கு ரூ. 1 கோடியே 32 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் அவர்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்புகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.

தமிழக மாணவர்கள் எந்த தேர்வையும் எதிர் கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டங்களை உருவாக்க நிபுணர்குழு அமைக்கப்பட்டுள்ளது. 54 ஆயிரம் கேள்விகள் கொண்ட பயிற்சி புத்தகம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் எந்த போட்டித் தேர்விலும் பங்கேற்று வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.

அமைச்சர்கள் கே.டி. ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, ராதாகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சுப்பிரமணியம், சந்திர பிரபா, இன்பதுரை உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

Leave a Response