மேட்டூர் அணை இன்று திறப்பு இல்லை…

jalagandes
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 23.56 அடியாக குறைந்துள்ளதால், டெல்டா பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன், 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த 5 ஆண்டுகளாக ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படுவதில்லை. இந்நிலையில் இந்த ஆண்டும் நீர்வரத்து குறைந்ததால் நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 23.56 அடியாக குறைந்து விட்டது. இதனால் அணை குட்டைபோல் காட்சியளிக்கிறது.

அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவேண்டும் என்றால் அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 90 அடியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் ஒரே சீராக இருந்தால் மட்டுமே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடமுடியும். இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் பாசனவசதி பெறுகிறது. எனவே, இந்த ஆண்டில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்பதால் டெல்டா பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Leave a Response