தமிழக முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் (மே 24) பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக நாளை (மே 23) மாலை, முதல்வர் பழனிசாமி டில்லி புறப்பட்டு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமரை சந்தித்து விட்டு வந்த 2 நாட்களில் தற்போதைய முதல்வர் பழனிசாமி பிரதமரை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் சிலர் இன்று தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் முதல்வர், பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பிரதமரை பார்க்க முதல்வர் பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாகவும், இந்த சந்திப்பின் போது வறட்சி நிவாரணம் குறித்து முதல்வர், பிரதமரிடம் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.