பழைய 500 ரூபாய் நோட்டை வைத்து செல்போனை சார்ஜ் செய்யலாம்…

elec
தற்போது உபயோகத்தில் இல்லாத பழைய 500 ரூபாய் நோட்டை இப்படி கூட பயன்படுத்தலாம் என்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த இளைஞர். அப்படி என்ன பண்ணாரு கேக்குறிங்களா வாங்க தெரிஞ்சிக்கலாம்.

அதாவது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாட்டில் பெரும் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல மாதங்களுக்குப்பின் நிலைமை சீரடைந்துள்ளது.

ஆனாலும், தொடர்ந்து பல இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை எப்படி பயனுள்ள விதத்தில் மாற்றுவது என்று யோசித்த 17 வயது இளைஞர் ஒருவர் ஆச்சர்யமூட்டும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார்.

ஒரிசா மாநிலத்தின் நௌபடா மாவட்டத்தைச் சேர்ந்த லச்மண் துண்டி என்ற அவர் காரியர் கல்லூரியில் படித்துவருகிறார். ஏழ்மையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் பகுதிநேரமாக பல்புகளைத் தயாரித்து விற்று தன் படிப்பை தானே கவனித்துக்கொள்கிறார்.

“பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு செல்லாமல் போன பழைய ரூபாய் நோட்டுகளில் சிலிக்கான் பூச்சு இருக்கிறது. ரூபாய் நோட்டைக் கிழித்தால் அது நன்கு தெரிகிறது. அதில் வயர் மற்றும் ட்ரான்ஸ்ஃபார்மரை இணைத்தேன். பின் சூரியஒளி படும் இடத்தில் அதை வைத்து 5 வாட் வரை மின்சாரத்தைத் தயாரிக்கிறேன். இவ்வாறு தயாரிக்கும் மின்சாரத்தை சேமித்து வைக்கவும் முடியும்” என்று அந்த துண்டி கூறுகிறார்.

துண்டியின் கண்டுபிடிப்பு பற்றிய தகவல் பிரதமரை எட்டியுள்ளது. பிரதமர் அலுவலகத்திலிருந்து கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி ஒரிசா மாநில அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் துண்டியின் கண்டுபிடிப்பு பற்றிய அறிக்கையை அளிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏழ்மையை பொருட்படுத்தாது தானே பல்பு தயாரித்து விற்று கல்வியைத் தொடரும் முன்னுதாரண இளைஞர் துண்டி, தனது கண்டுபிடிப்புக்கு பிரதமரின் பாராட்டு கிடைத்தால் அது மிகவும் பெருமை தரும் தருணமாக அமையும் என்று கூறியுள்ளார்.

Leave a Response