இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் முழு விபரம்…

cbse-result
9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன.

மொத்த தேர்ச்சி விகிதம்: 92. 1 %

இது கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதத்தை விட 0.7 சதவீதம் அதிகமாகும்.

மாணவிகள் தேர்ச்சி விகிதம் : 94.5 %

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் : 89.3 %

இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 5.2 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு எழுதிய 6732 பள்ளிகளில், 292 அரசுப் பள்ளிகள் உட்பட 1813 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒரு பள்ளி கூட 100 சதவீத தேர்ச்சியை பெறவில்லை.

அரசுப் பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 87.86 சதவீதம். அரசுப் பள்ளிகளை பொறுத்தவரை 292 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. ஆனால் அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் 97.77 சதவீத தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.

பாடங்களை பொறுத்தவரை அதிக அளவில் கணக்குப்பதிவியலில் 5,597 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மொழிப்பாடங்களில் (தமிழ், ஆங்கிலம்) ஒருவர் கூட 100 மதிப்பெண்கள் பெறவில்லை.

அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள மாவட்டங்களில் 97.85 சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கடைசி இடத்தை 84.86 சதவீத மதிப்பெண்களுடன் கடலூர் மாவட்டம் பிடித்துள்ளது.

அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை விருதுநகர் மாவட்டம் 95.977 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் இராமநாதபுரம் (95.395 %), மூன்றாவது இடத்தில் ஈரோடு (94.7514 %) ஆகிய மாவட்டங்கள் உள்ளன. கடைசி இடத்தில் திருவள்ளூர் மாவட்டம் (74.3632) உள்ளது.

இந்த ஆண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர்கள் அறிவிக்கப்படாமல் , கிரேடு முறையில் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கிரேடு-ஏ (1180 மதிப்பெண்களுக்கு மேல் இருந்தால்), கிரேடு-பி (1151-1180 மதிப்பெண்கள்), கிரேடு -சி (1126-1150 மதிப்பெண்கள்) ஆகியவை வெளியிடப்பட்டன.

இதன்படி கிரேடு-ஏ 1,171 மாணவர்களும், கிரேடு-பி 12,283 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

பிளஸ் டூ தேர்வெழுதிய பார்வை மாற்றுத்திறனாளிகள் 92 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளில் 88 சதவீத பேரும், செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு உள்ளவர்களில் 78 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்வெழுதிய ஒரே ஒரு திருநங்கை மாணவியும் தேர்ச்சி அடைந்துள்ளார்.

தேர்வெழுதிய பிளஸ் 2 மாணவர்கள் வரும் 15-ஆம் தேதி இணையதளம் வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும்,17-ஆம் தேதி பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள், வரும் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மொழிப்பாடங்களுக்கு 305 ரூபாயும்,மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Response