ஜாக்கிரதை இன்று முதல் ஆரம்பம் கத்திரி வெயில்….

agni
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று (மே 04) துவங்குகிறது. இதனால் பொது மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் கத்திரி வெயில் இன்று துவங்கி, மே 29 வரை நீடிக்கும். இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் கூடுதலாக இருக்கும். ஏற்கனவே கோடை துவங்கியது முதல் வெயிலின் தாக்கல் அதிக அளவில் இருந்து வருகிறது. பல இடங்களில் அனல் காற்றும் வீசி வருகிறது.

கரூர்,சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் 110 டிகிரி வரை இருந்து வருகிறது. இந்நிலையில் கத்திரி வெயில் இன்று துவங்குகிறது. இருப்பினும் ஓரிரு நாட்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் நேற்று அறிவித்துள்ளது மக்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.

சில நாட்களுக்கு முன் வெயிலின் தாக்கம் காரணமாக பகல் பொழுதில் வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கத்திரி வெயில் காலத்தில் புறஊதா கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள அதிக அளவில் நீர் பருக வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மெல்லிய ஆடைகளை அணிய வேண்டும். ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள் அருந்துவது உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால் அதற்கு மாற்றாக மோர், தயிர், வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சியான உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளும்படி டாக்டர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Response