தப்பு தண்டா – இசை வெளியீடு…

thappu-7
கிளாப் போர்ட் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து சத்யா கதாநாயகனாக நடிக்க, சுவேதா கய் என்பவர் கதாநாயகியாக நடிக்க, மைம் கோபி, ஜான் விஜய் அஜய் கோஷ்,போன்றோர் உடன் நடிக்க ,

ஸ்ரீகண்டன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம் தப்பு தண்டா .

சத்யா பல படங்களுக்கு பைனான்ஸ் செய்தவர் . இந்தப் படத்துக்கும் ஆரம்பத்தில் அப்படிதான் வந்திருக்கிறார் . படத்தின் தயாரிப்பாளர் மணி . ஒரு நிலையில் சத்யா தயாரிப்பாளராகவும் நாயகனாகவும் ஆகி இருக்கிறார் .

இயக்குனர் ஸ்ரீகண்டன் பாலு மகேந்திரா சினிமாப் பட்டறையில் பயின்று இயக்குனர் ஆகி இருக்கும் முதல் நபர் .

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பிரவீன் காந்த், ஷக்தி சிதம்பரம், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் அண்மைக் காலத்தில் கவனம் கவர்ந்த மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், எட்டு தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீகணேஷ்,

டோரா பட இயக்குனர் தாஸ், மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு, கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்

விழாவுக்கு பாலு மகேந்திராவின் துணைவியார் அகிலா அம்மையார் வந்திருந்தார் . எந்த சினிமா நிகழ்ச்சியிலூம் அவர் இதுவரை கலந்து கொண்டவர் அல்ல .
நிகழ்வில் படத்தின் முன்னிட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன .ஓட்டுப் போட பணம் தருவது உள்ளிட்ட தவறான விசயங்களில் புழங்கும் பெரும்பணம் ,

அதன் விளைவாக நடக்கும் குற்றங்கள் என்று படம் போகும் என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது . பிக்பாக்கெட் அடிக்க டிரைனிங் எடுக்கும் காட்சிகள் கூட வருகின்றன…… கவனம் ! கவனம் !

படத்தின் தயாரிப்பாளர் கம் நாயகன் என்றாலும் மற்ற கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் உள்ள திரைக்கதையை அனுமதிக்கும்,

பெருந்தன்மை அல்லது புத்திசாலித்தனம் சத்யாவுக்கு இருப்பது டிரைலரில் புரிந்தது . வாழ்த்துகள்

நரேன் பாலகுமார் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தன . வினோத் பாரதியின் ஒளிப்பதிவு அட்டகாசம் . இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு பெரிய பலமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

அவுட்டோர் பாடலை எடுத்த விதமாகட்டும் , இன்டோர் குத்துப் பாடலை வண்ணமயமான பிரகாசத்தில் எடுத்த விதமாகட்டும் ஜாலம் காட்டி இருந்தார் வினோத் பாரதி

நிகழ்ச்சியில் பேசிய எல்லோருமே நாயகன் சத்யாவின் பெருந்தன்மை, சினிமா திறமை மற்றும் ஆர்வத்தை புகழ்ந்தனர் .

சக்தி சிதம்பரம் பேசும்போது ” எனது படத்தின் கதையை சொல்லி பைனான்ஸ் கேட்டபோது பணம் கொடுத்ததோடு ‘ நீங்க ஜெயிக்கிற குதிரை சார் .

படத்தை ஆரம்பிங்க ‘ என்றார் சத்யா . அதுவரை படத்துக்கு டைட்டில் கிடைக்காத நான் அதையே படத்துக்கு பெயராக ஜெயிக்கிற குதிரை என்று வைத்தேன் ” என்றார்.

மிக தெளிவானவர் சத்யா . இயல்பானவர் . படப்பிடிப்பில் தான் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் என்பதற்கான எந்த அடையாளமும் காட்டாமல் இயல்பாக இருந்தார் ” என்றார் ஜான் விஜய் .

விசாரணை படத்தில் தெலுங்கு போலீஸ் அதிகாரியாக வந்த அஜய் கோஷ் “நான் தெலுங்குக்காரன். ஆனா நானே சொல்றேன் தெலுங்கு சினிமாவுல எல்லாம் ஓவர் பந்தா .

தமிழ் சினிமாதான் இயல்பா இருக்கு . எனக்கு தமிழ் சினிமாவில் நிறைய நடிக்கணும் . பேரு வாங்கணும். இங்கயே செட்டில் ஆகணும்னு ஆசை ” என்றார் .

ரட்சகன் இயக்குனர் பிரவீன் காந்த் தன் பேச்சில் ” சினிமாவில் நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் . தவறுகளை அழகு படுத்தி நியாயப்படுத்தும் காட்சிகள் கூடாது ” என்று சொன்னது கவனிக்கத் தகுந்த ஒன்று .

படத்தின் இயக்குனர் ஸ்ரீகண்டன் பேசும்போது ” நான் ஆரம்பத்தில் எடுக்க நினைத்த கதை வேறு . அதை இப்போது எடுக்க முடியவில்லை . இது வேறு கதை .

உண்மையில் பாலு மகேந்திரா சார் இப்போது உயிரோடு இருந்தால் இந்தப் படம் எடுத்த காரணத்துக்காக என்னை செருப்பால் அடித்து இருப்பார் . அது போல கவர்ச்சி பாட்டெலாம் வைத்தால் அவருக்கு பிடிக்காது .

எனினும் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை படமாக தந்துள்ளேன். எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் இருக்கும் ” என்றார் .

தயாரிப்பாளரும் நாயகனுமான சத்யா பேசும்போது

பைனான்சியராக இருந்தேன் . படத்தின் நடிக்க சொன்னார்கள். நடித்தேன் .ஒரு நிலையில் தயாரிப்பாளர் சிரமப்பட்டபோது நானே தயாரிப்பாளர் ஆகி விட்டேன் .

இதில் நான் ஒன்றும் பெரிய ஹீரோ எல்லாம் கிடையாது . படத்தில் பல நல்ல கேரக்டர்கள் உள்ளன . அதில் என் கேரக்டரும் ஒன்று . என் கேரக்டருக்கு ஜோடியும் பாடல்களும் இருப்பதால் நான் ஹீரோ அவ்வளவுதான் .

நல்ல கதை திரைக்கதை படமாக்கல் இவைதான் நிஜமான் ஹீரோ என்பது என் எண்ணம் ” என்றார் தெளிவாக…

Leave a Response