‘பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம்’-சட்டசபையில் மு.க.ஸ்டாலின்…

stalin..
பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம் அமைக்க முயன்று இருக்கிறார்கள் என்று தமிழக பட்ஜெட் நிலை குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கூறினார்.சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி அறிக்கை மீதான விவாதம் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. விவாதத்தின் இறுதி நாளான இன்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக பட்ஜெட் நிலை குறித்து பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்ட போது, பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம் அமைக்க முயன்று இருக்கிறார்கள். புதிய திட்டங்கள் எதுவும் இல்லை.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது அமைதி, வளம், வளர்ச்சி, மக்கள் வாழ்வில் முன்னேற்றம் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. இப்போது அமைதி இருப்பதாக தெரியவில்லை. மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தின் போது வன்முறை, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம், வறட்சியால் விவசாயிகள் உயிரிழப்பு டெல்லி வரை சென்று போராட்டம், துப்பாக்கி சூட்டில் மீனவர் பிரிட்ஜோ உயிரிழப்பு, தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் டெல்லியில் தற்கொலை, தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று படிக்கவே பயப்படும் நிலை, குடிநீரை கேட்டு போராட் டம், பாமாயில், பருப்பு கேட்டு பெண்கள் போராட்டம் என்று தமிழகம் அமைதியை இழந்த மாநிலமாகவே இருக்கிறது.

தமிழ்நாட்டில் ரூ. 2.4 லட்சம் கோடியில் தொழிற்சாலை அமைப்பதற்காக 98 பரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் புதிய தொழிற்சாலைகள் இதுவரை வரவில்லை. தொழில் வளர்ச்சி பின்தங்கி விட்டது. நல்லாட்சி என்றார்கள். அதுவும் நடக்கவில்லை.

கச்சத்தீவை மீட்போம். பாக்ஜலசந்தியில் பாதுகாப்பு அளிப்போம். புதிய குடிநீர் திட்டங்களை கொண்டு வருவோம், கடல் நீரை குடிநீராக்கும் புதிய திட்டம் கொண்டு வரப்படும். கிரானைட், தாதுமணல் விற்பனை ஆகியவற்றை அரசே ஏற்று நடத்தும் என்று வாக்குறுதி அளித்தனர். இதில் எதுவுமே நடைபெறவில்லை. 110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.இந்த ஆண்டு வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையிலும் புதிய திட்டம் இல்லை. புதிய குடிநீர் திட்டமும் இல்லை. இந்த ஆட்சியில் எந்த புதிய திட்டமும் இல்லை. பழைய நிலைதான் நீடிக்கிறது இவ்வாறாக சட்டசபையில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார் .

Leave a Response