கார்த்திக் நரேன் தீவிர ரசிகராக மாறிவிட்டேன்! ஹிட் இயக்குனர் புகழாரம்…

menon
துருவங்கள் 16′ படம் பார்த்துவிட்டு கார்த்திக் நரேன் ரசிகராக மாறிவிட்டதாக இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘துருவங்கள் 16’. கடந்தாண்டின் இறுதிப்படமாக வெளியானது. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பல்வேறு திரையுலக பிரபலங்களும் இப்படத்தைப் பாராட்டியுள்ளார்கள். 75 நாட்கள் கடந்ததை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.கவுதம் மேனன், ஞானவேல்ராஜா, அபினேஷ் இளங்கோவன், சக்திவேலன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு, நடித்துவர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.இந்நிகழ்வில் இயக்குநர் கவுதம் மேனன் பேசியது, “சினிமாத்துறை திறமையாளர்களை வரவேற்கும். அதிலும், தமிழ் திரையுலகம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வரவேற்கும். இதற்கு ஒரு பெரிய உதாரணம் கார்த்திக் நரேன். 21 வயது பையன் இவ்வளவு நேர்த்தியாக படம் இயக்கி பார்த்ததில்லை என்றும் அவர் கூறினார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை வெளியிட்டேன். அப்போது “நாங்கள் உங்கள் ரசிகன்” என்று கார்த்திக் நரேன் தெரிவித்தார். இப்படத்தைப் பார்த்துவிட்டு, நான் அவருடைய ரசிகராக மாறிவிட்டேன். இவருடைய அடுத்த படம் எப்படியிருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.கார்த்திக் நரேனின் அடுத்த ‘நரகாசுரன்’ படத்தை, அவரோடு இணைந்து தயாரிக்கிறேன். 22 வயதில் அவ்வளவு தெளிவாக இருக்கிறார். முழுக்கதையுடன் அவர் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது எனக்கே பொறாமையாக உள்ளது. அனைத்து நடிகர்களும் அவரோடு இணைந்து படம் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

அபினேஷ் இளங்கோவன் பேசும் போது,”2017-ம் ஆண்டில் ஒரு படத்தின் அனைத்து உரிமைகளும் விற்றுவிட்டது என்றால் அது ‘துருவங்கள் 16’ படத்துக்கு மட்டும் தான். கேரளா, கர்நாடகா, தெலுங்கு, இந்தி, தொலைக்காட்சி உரிமை, டிஜிட்ட்டல் உரிமை என அனைத்துமே விற்பனையாகிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response